நீங்கா நினைவில் தோழர் சி.எஸ்.பி.
- D. சிவகுருநாதன், அஞ்சல் ஆர் எம் எஸ் கேஷுவல் மற்றும் கான்ட்ரேக்ட் ஊழியர் சங்க மாநில தலைவர்.
மார்க்சீயம் கற்பித்த மாமனிதர் சி.எஸ்.பி. என்கிற சி.எஸ். பஞ்சாபகேசன் - ஆசிரியர் - ஸ்தாபகர் - உழைக்கும் வர்க்கம் மாத இதழ் அவர்களின் நூற்றாண்டையொட்டி நினைவுகளை பகிர்வது மகிழ்ச்சிக்குரிய ஒன்று.
தோழர் C.S.P.ஐ பற்றி பல்வேறு கோணங்களில் எழுதவும் பேசவும் தற்போதுள்ள தலைவர்கள் பலரும் நினைவில் கொள்ளும் வகையில் அஞ்சல் துறையில் மிகப் பெரிய தலைவராக திகழ்ந்த சி.எஸ்.பி. அவர்களை வேலூர் நகரத்தில் பலமுறை நான் சந்தித்திருந்தாலும் - முதல் முதலாக அவரது அறிமுகம் தோழர் BVS என்கிற B.V.சுப்ரமணியம் அவர்களோடு பூங்கா நகர் அஞ்சலகத்தில் நிகழ்ந்ததை என்றும் என்னால் மறக்க இயலாது. NFPTE வட சென்னை அஞ்சல் 3 சங்கத்தின் சார்பாக “சுதந்திர போராட்டத்தில் தொழிலாளி வர்க்கத்தின் பங்கு” என்ற அற்புதமான உரைவீச்சு தோழர் சி.எஸ்.பி. அவர்களால் நிகழ்த்தப்பட்டது. அதற்கு ஏற்பாடு செய்தவர் தோழர் BVS. காங்கிரஸ் கருத்தோட்டம் உள்ள அரசியல் நிலைபாட்டில் இருந்த எனக்கு காந்தி தாத்தா வந்தார் - நமக்கு சுதந்திரம் வாங்கி தந்தார் என்ற என் அரசியல் நிலைபாட்டை தலைகீழாக கொட்டி கவிழ்ந்தார் சி.எஸ்.பி.. பல்வேறு ஆதாரங்களோடு 1942 வெள்ளையனே வெளியேறு என்ற ஒத்துழையாமை இயக்கத்திற்கு பின்பு காங்கிரஸ் கட்சி எந்த போராட்டத்தையும் நடத்தவில்லை என்பதை சுட்டிக் காட்டினார் சி.எஸ்.பி.. கப்பல் படை எழுச்சியின் முடிவில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், முஸ்லீம் லீக் ஆகிய அரசியல் கட்சிகளின் கொடிகளை இராணுவ கப்பல்களில் ஏற்றப்பட்டன. தரைப்படை இராணுவமும், விமானப் படையும் கப்பல் படை வீரர்களுக்கு எதிராக எதுவும் செய்ய மாட்டோம் என்றும் பிரிட்டிஷ் இராணுவ அதிகாரிகளின் ஆணையை நிறைவேற்ற முடியாது என்றும் மறுத்து விட்டனர். கப்பல் படை புரட்சிக்கு ஆதரவாக இந்தியா முழுவதும் தொழிலாளர் வேலை நிறுத்தங்கள், 1946 தபால்காரர் வேலை நிறுத்தம் ஆகிய அனைத்தையும் நினைவு கூர்ந்து, இனி சுதந்திர போராட்டத்தை அடக்க முடியாது என்றுணர்ந்த பிரிட்டிஷ் சர்க்கார், இந்தியா, பாகிஸ்தான் என்று இரண்டு நாடுகளாக பிரித்து சுதந்திரம் கொடுத்தது என்று குறிப்பிட்டார்தோழர் சி.எஸ்.பி..
உணர்ச்சிகரமாக தொழிலாளி வர்க்கத்தின் போராட்டங்களை நினைவு கூறும் வகையில் அவரின் உரை அமைந்தது. அன்று முதல் நீண்ட விவாதங்கள், பலருடன் நடத்திய கேள்வி பதில் விளக்கங்களுடன் காங்கிரஸ் கட்சியின் அரசியல் நிலையிலிருந்து மார்க்சீய கருத்துக்களின் உள்ளார்ந்த உணர்வுகளுடன் தொழிற்சங்க அமைப்புகளில் செயல்பட துவங்கினேன். அதற்கு ஆரம்ப கால அடித்தளமிட்ட தலைவர் தோழர் சி.எஸ்.பி. என்றால் மிகையானது அல்ல.
மார்சீய கருத்துக்களை மேலோட்டமாக பார்த்து இயக்கத்தை கட்டியவர் அல்ல தோழர் CSP. K.G. போஸ் அணியின் உன்னத தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த CSP அவர்கள் அக்காலத்தில் தொழிற்சங்கங்களில் ஏற்பட்ட திருத்தல் வாத போக்கை தூக்கி எறிந்து கொள்கை வழியில் நின்று இயக்கம் காத்தவர் தோழர் சி.எஸ்.பி.
அதேபோல் இடது சாரி அதி தீவிரவாதத்தை ஒதுக்கி தள்ளி உறுதியாக நின்று தொழிலாளி வர்க்க போதனைகளை உயர்த்திப் பிடித்தவர் தோழர் CSP.
K.G. போஸ் அணியை பல்வேறு ஆரம்பகால சவால்களை, தமிழ்நாடு மாநிலத்தில் சந்தித்த சங்கடங்களை, இடர்களை, துச்சமென கடந்து தொழிற்சங்க ஒற்றுமையை கட்டி வலுப்படுத்தினார். இன்று எல்லா அரங்கத்திலும் புறக்கணிக்க முடியாத அணியாக K.G. போஸ் அணி திகழ்கிறது என்றால் அதற்கு CSP போட்ட அடித்தளமே காரணமாகும்.
தமிழகம் முழுவதும் சுற்றி திரிந்து - ஒரு நபரே ஆயினும் அவரவர் வசிக்கும் இடத்திற்கே சென்று சந்தித்து இயக்கம் கட்ட எடுத்த அவரது முன் முயற்சி இமாலய சாதனையாகும்.
தோழர் BVS, S. கணேசன், S. சந்திர சேகரன், J. ரங்கநாதன் ஆகிய தோழர்களோடு இணைந்து தொழிற்சங்க குழு (TU குரூப்) தமிழகம் முழுவதும் உருவாக்கி, தொழிற்சங்கத்தில் வேலை செய்வது எப்படி என்று கற்பிக்கவும் - மார்க்சீய சித்தாந்தங்களில் உள்ளார்ந்த விஷயங்களை விளக்கி வகுப்பெடுக்கவும் ஆசிரியர்களை உருவாக்கியதில் - CSP யின் மிகப் பெரிய பங்கு பிரமிக்கத்தக்கது.
எல்லாவற்றிற்கும் மேலாக 'உழைக்கும் வர்க்கத்தின்' ஒவ்வொரு இதழையும் போற்றிப் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷமாக வெளி கொணர்ந்தது CSP அவர்களின் பெரும் பங்கினால் மட்டுமே.
தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சார்ந்த பல தோழர்களை, பெண் ஊழியர்களை தொழிற்சங்கத்திலும் வாழ்க்கையிலும் முன்னேற வழி வகுத்தவர் தோழர் CSP.
தான் கொண்ட கொள்கை கோட்பாட்டில் தனது மனைவி உட்பட குடும்பத்தினர் அனைவரையும் ஒன்றிணைத்து அனைவருக்கும் உதாரணமாக திகழ்ந்தவர் C.S.P.
எனது துணைவியார் R விஜயா வுடன் எனது திருமணத்தை 7.1.1978 ல்
சடங்குகள் ஏதுமின்றி நடத்தி வைத்தவர் தோழர் CSP....
தோழர் CSP யுடன் இணைந்து பணியாற்றியதும் அவர் வாழ்ந்த காலத்தில் நானும் பங்கேற்ற இயக்க நினைவுகளும் என்றென்றும் அழியாதவை.
தோழமை உணர்வின் சிகரமாக திகழ்ந்த CSPயின் அன்பின் அரவணைப்பை பெற்றவன் என்கிற அடிப்படையில் அவருக்கு எனது வீர வணக்கத்தை செலுத்தி CSPயின் நினைவுகள் என்றென்றும் என்னை விட்டு அகலாதவை என்று பதிவு செய்கிறேன்.
Comments
Post a Comment