பிள்ளைகள் அனைவரும் இயக்கத்தில்

 தோழர் சி.எஸ்.பஞ்சாபகேசன் நூற்றாண்டு

பதிவு 28

சி.எஸ்.பி தன் பிள்ளைகள் அனைவரையுமே  இடதுசாரி இயக்கத்தில் ஈடு படுத்தியுள்ளார் என்று பெருமையாக குறிப்பிடுவார்கள். இதுவரை நான் எழுதிய பதிவுகளில் இடதுசாரி கருத்துக்களை எனக்குள் எப்படி பதிய வைத்தார் என்று நிகழ்வுகளாக குறிப்பிட்டிருந்தேன். இடதுசாரி இயக்கத்தில் எவ்வாறு ஈடுபடுத்தினார் என்பதை இந்த பதிவில் குறிப்பிட விரும்புகிறேன்.

குடியிருப்புடன் இணைந்த காட்பாடி எக்ஸ்டென்ஷன் போஸ்ட் ஆஃபீஸில் அப்பா வேலை செய்த போது எதிர் வாடையில் குடியிருந்த ஒரு குடும்பத்தினர் தங்கள் வீட்டிலேயே ஒரு ஆங்கில மருந்து கடை துவங்கினர். அப்பா அக்கவுன்டன்சி படித்துவிட்டு கூட்டுறவு சங்கத்தில் முதன் முதலில் வேலை பார்த்த அனுபவம் இருந்ததால் அந்த மருந்து கடைக்கு வேண்டிய கணக்குகளை எப்படி வைக்க வேண்டும் என்று துவக்க நிலை உதவிகளை செய்து தந்தார். அதே நேரத்தில்தான் 1960 அகில இந்திய தபால் தந்தி வேலை நிறுத்தம் வந்து, அதில் முன்னணி பாத்திரம் வகித்து பணி நீக்கம் செய்யப்பட்டார். ஓரிரு மாதங்களுக்கு பிறகு பணி நீக்கம் விலக்கிக் கொள்ளப் பட்டு தாற்காலிக பணி நீக்கத்தில் சில மாதங்கள் வைக்கப் பட்டார். குடும்பத்தை நடத்தி செல்ல வேண்டிய அவசியம் கருதி அந்த மருந்து கடையிலேயே கணக்கு எழுத பகுதி நேர பணியில் ஈடுபட்டார். அப்போது அந்த கடை வேலூர் பஜாருக்கு மாற்றப்பட்டு இருந்தது. அந்த கடையில் வேலை செய்த  பதினெட்டு வயதை எட்டாத சிறுவன்தான் பின்னாளில் அப்பாவின் பிரதியாக உருவான தோழர் பரமசிவம்.

நல்ல மதிப்பெண்கள் பெற்று எஸ்.எஸ்.எல்.சி தேர்ச்சி பெற்றிருந்தார் பரமசிவம். தபால் தந்தி இலாகாவில் மதிப்பெண் அடிப்படையில் பதவியில் அமர்த்தும் முறை இருப்பதை எடுத்துச் சொல்லி இலாகா பணிக்கு விண்ணப்பிக்கச் சொல்லி பரமசிவத்தை ஊக்கப் படுத்தினார் அப்பா. சந்திக்கும் ஒவ்வொரு நபரையும் ஊக்கப்படுத்தத் தவறாதவர் அப்பா. வாழ் நாள் பணியாக அதனை செய்து வந்தார். பரமசிவமும் அப்பா சொன்னபடி தொலைபேசி துறைக்கு பணி விளம்பரம் வந்த போது அதற்கு விண்ணப்பித்து தொலைபேசி ஆபரேட்டர் பணி கிடைத்து வேலையில் அமர்ந்தார். மிக மிக எளிய குடும்பத்தில் இருந்து வந்த தனக்கு வழி காட்டிய அப்பாவை தேடி வந்து நன்றி கூறினார். துடிப்பான இளைஞனாக இருந்த பரமசிவம் அப்பாவுடன் இணைந்து தபால் தந்தி துறையில் இயக்கப் பணியை அர்ப்பணிப்புடன் செய்யத் துவங்கினார்‌. துறையில் பணியாற்றிய அத்தனை பேரையும் பிரதர் பிரதர் என்று அழைத்து உற்சாகப் படுத்தி இயக்கப் பணியில் இணையச் செய்வார். அதனாலேயே அவர் 'பிரதர்' என்ற செல்லப் பெயரால் அடையாள படுத்தப் பட்டார். 

நான் படித்து முடித்து வேலூரிலேயே ஸ்டேட் பேங்கில் வேலைக்கு சேர்ந்த பிறகு அப்பாவை பார்க்க வரும் தோழர் பரமசிவம் என்னையும் பார்த்து பேச தவறமாட்டார். 

"என்ன ரவி, நீங்கள் தோழர் கே.ஜி.போஸை சந்த்தித்திருக்கிறீர்களாமே,அப்பா சொன்னார். கே. ஜி. போஸ் என்ன சொன்னார்?" என்று வினவியவாரே தோளில் கை போட்டு தோழமையுடன் பேசுவார். "இன்னிக்கு மாலை நகர தொழிற்சங்க கூட்டம் இருக்கிறது எல்.ஐ.சி அலுவலக மாடியில்..  வாங்களேன்" என்று என்னை மெல்ல மெல்ல இடது சாரி இயக்கப் பணிகளில் ஈடுபடுத்தினார். என் பணியிடத்தில் இருந்த சங்கம் அரசியல் கலப்பற்ற என்ற பெயரில் இயங்கிய சந்தர்ப்ப வாத சங்கம் என்ற தெளிவினை நகர தொழிற்சங்கத்தின் செயல்பாடுகள் எனக்கு உணர்த்தின. நான் அங்கத்தினராக இருந்த சங்கம்  என்னை செயல்பட விடாமல் ஜனநாயக விரோதமாக

தடுத்தது. ஆனால் நான் அங்கத்தினராக இல்லாதபோதும் நகர தொழிற் சங்கத்தின் செயல்பாடுகளில் நான் பங்கேற்க வரவேற்கப் பட்டேன். இதன் பயனாக ஆசிரியர்கள் ஆக இருந்த என் கல்லூரி நண்பர்களின் தொழிற் சங்கத்தின் போராட்டங்களுக்கு நகர தொழிற்சங்கத்தின் ஆதரவினை திரட்டித் தர முடிந்தது. ரயில்வே ஊழியர் போராட்ட களத்தில் செயலாற்ற முடிந்தது. போராட்டத்தில் கைது செய்யப் பட்டு கைதாகி வேலூர் பெண்கள் சிறையில் இருந்த கல்லூரி ஆசிரியைகளுக்கு உறு துணையாக பல உதவிகள் செய்ய முடிந்தது. பீடி தொழிலாளர்கள் மாநாட்டில் தொண்டாற்ற முடிந்தது. வேலூரில் இடதுசாரி இயக்கப் பணிகளில் பங்கேற்கும் வாய்ப்பு எனக்கு இலகுவாக வாய்த்தது. இப்படியாக இடதுசாரி இயக்கத்தில் நான் ஈடுபாட்டுடன் பங்கேற்றேன்.

அப்பா ஒவ்வொருவரையும் ஒவ்வொரு முறையில் அணுகினார். அந்த வகையில் என் கடைசி தம்பியை அவர் அணுகிய முறை வெகு ரசனைக்குரியது. என் கடைசி தம்பி கிருஷ்ணன் பதினெட்டு வயதை எட்டிய போது  காரைக்குடி பொறியியல் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான். அந்த பதினெட்டாவது வயது பிறந்த நாளன்று அப்பா அவனுக்கு எழுதிய கடிதத்தை இணைத்துள்ளேன். நல்ல குடிமகனாக உருவாக வேண்டும் என்று வலியுறுத்தி அவர் எழுதியுள்ள கடிதம் குடியரசு தினமான இன்று முக்கியத்துவம் பெறுகிறது. ஒவ்வொரு தந்தையும் தன் மகனுக்கு எழுத வேண்டிய கடிதமாக அது அமைந்துள்ளது.

தந்தை மகனுக்கு எழுதிய கடிதம்:

"உனக்கென்று ஒரு மறுக்க மறக்க முடியாத இடத்தை பிடிக்க வேண்டுமென்று விழைகிறேன்"- சி எஸ் பஞ்சாபகேசன்

எனது தாயார் நினைவு நாளை ஒட்டி நாங்கள் ஒன்று கூடி பழைய கடிதங்களை எடுத்து படிக்கும்போது எனது தந்தையின் இக்கடிதம் எதேச்சையாக கிடைத்தது. 43 ஆண்டுகளுக்கு பிறகு இன்றுதான் இக்கடிதத்தை மீண்டும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இக்கடிதம் எழுதப்பட்ட 1977ஆம் ஆண்டு எனது தந்தை திரு.சி எஸ் பஞ்சாபகேசன் வேலுரில் தபால் அலுவலகத்தில் பணி புரிந்து வந்தார். நான் காரைக்குடியில் பொறியியல் படிப்பு படித்து வந்தேன். மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த கடிதம் என்பதால் இதனை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

சி பி கிருஷ்ணன்

கடிதத்தின் பிரதி

வேலூர் (வட ஆற்காடு)

4.2.1977

அன்புமிக்க கிருஷ்ணனுக்கு,

அநேக ஆசிகள். நாளையோடு உனக்கு பதினெட்டு ஆண்டுகள் பூர்த்தி ஆகிறது. நீ ‘major’ ஆகிறாய். சட்ட ரீதியில் உனக்கு இனி பாதுகாப்பு தேவையில்லை. பிரச்சனைகள் அனைத்திலும் நீயாகவே சிந்தித்து சரியான முடிவெடுக்கக்கூடிய பருவம் எய்திவிட்டாய் என்பது பொருள். இன்று இரவு படுத்து உறங்கும்போது நள்ளிரவு 12 மணி 1 நிமிடத்திற்கு அந்த தகுதி உன்னை வந்து அடைந்து விடுகிறதா? இல்லை. கடந்த 10 ஆண்டு காலத்தில் அதிலும் குறிப்பாக கடந்த 3 - 4 ஆண்டு காலத்தில் பெற்ற அனுபவப் பாடம் உன்னை அத்தகுதி உள்ளவனாக ஆக்குகிறதா? பின்னதுதான் உண்மை என்று கூற தேவையில்லை.

உன்னை ஒத்த வயதுடைய தோழர்களுக்கு உலகத்தைப் பற்றி, நாம் வாழும் சமுதாயத்தை பற்றி அதில் உள்ள ஏற்றதாழ்வுகளைப் பற்றி தெரிந்திருப்பதைவிட உனக்கு மிகக் கூடுதலாக தெரியும் என்பது என் நம்பிக்கை. ஆக 18 வயது மேஜர் எதையும் தன்னிச்சையாக தீர்மானிக்க திறமையுண்டு என்று கூறுவதின் பொருள் வெறும் 365X18 என்ற நாட்களின் எண்ணிக்கையை பொறுத்ததல்ல. அவைகள் வெறும் எண்கள். சட்டத்திற்கு அவை போதுமானது. ஆனால் எதார்த்தத்திற்கு அது மட்டும் போதாது. முன் குறிப்பிட்டது போன்று சமுதாயத்தைப் பற்றிய சரியான கண்ணோட்டம்தான் உனக்கு இன்று கிடைத்திருக்கும் majority தகுதிக்கு ஏற்றவனாக்குகிறது.

இன்று கடந்தகால நிகழ்வுகளை சற்று சிந்தித்து, அசை போட்டு பார். அது இன்றைய நிலைகளை புரிந்து கொள்ளவும், (தனிப்பட்ட முறையிலும், குடும்ப அளவிலும், சமுதாய அளவிலும்) ஒரு சரியான கணிப்பு செய்யவும் பயன்படும். தவறுகள் இருப்பின் அவற்றை திருத்திக் கொள்ளலாம். குழப்பம் ஏற்பட்டால் அதுபற்றி மீண்டும் படித்து, கேட்டு, விளக்கம் பெறமுடியும். இனி எதிர்காலத்தில் நமது கடமை எது என்றும், அதை செய்ய தேவையான மனஉறுதியையும் நமக்கு அளிக்கும்.

இன்றைய அரசியல் போக்குகளை பேப்பர் மூலம் விபரம் தெரிந்து வைத்திருப்பாய் என எண்ணுகிறேன். ’நமது’ கணிப்புகள் எவ்வளவு சரியானது, துல்லியமாக தீர்மானிக்கப்பட்டு விளக்கப்பட்டது என்பது புரியும். ‘பாபூஜி’யின் (ஜகஜீவன்ராம்) statement ஒன்றே போதுமானது.

வரவிருக்கும் 3 ஆண்டுகள் உனக்கு மிக முக்கியம். படிப்பிற்கு மட்டுமல்ல, மற்றொரு தகுதியை பெறவும்தான். அதாவது இன்றைய பாராளுமன்ற ஜனநாயகத்தில் ஒரு ‘ஓட்டர்’ ஆகும் தகுதியை பெற 21 ஆண்டு நிரம்ப வேண்டும். ஆக இந்த 3 ஆண்டுகளில் உன் படிப்பில் முழு கவனம் செலுத்துவதுடன் அரசியல், சமுதாய, பொருளாதார விஷயங்களிலும் கவனம் செலுத்தி பாடம் பெற வேண்டும். அதற்கு தேவையான வழிகாட்டல் உன் விடுமுறை நாட்களில் நீ பெற வழி செய்து கொள்வது கடினமல்ல.

உலகில் கோடானுகோடி பேர் தோன்றி மறைந்துள்ளார்கள். ஆனால் ஒரு சிலரை உலகம் இன்றளவும் மறக்கவில்லை. அவர்களை மட்டும் ஏன் உலகம் மறக்க முடியவில்லை? அவர்கள் வாழ்ந்த சமுதாயத்தினின்று அவரக்ள் வேறுபட்டு நின்றார்கள் என்பது மட்டுமல்ல, அந்தந்த காலகட்டத்தில் இருந்த மேடு பள்ளங்களை கண்டு, இனம் கண்டு, அவற்றை போக்க சிறிதளவாவது, அவர்களுக்கு சரி என்று பட்ட வகையில் பாடுபட்டார்கள். அப்பணியில் தங்களையே அர்ப்பணித்துக் கொண்டார்கள். அந்த பாதை சரியா தப்பா என்று இன்று விமர்சிக்கிறோம். ஆனால் இன்று விஞ்ஞானம் மிக அற்புதமாக வளர்ந்துள்ள நிலையில், அந்த சமுதாய மேடு பள்ளங்களை பற்றிய அறிவு- அதற்கான காரணம், அவைகளை போக்கும் மருந்து மிக தெளிவாக கிடைத்துள்ளது. இந்த நிலை அன்று கிடையாது. ஆகவே இன்று நமக்கு ஒரு தெளிவான பார்வை இருக்க முடிகிறது. அதை அமுல் நடத்துவதில் எத்தனையோ இடர்பாடுகள், எதிர்ப்புகள், தாக்குதல்கள். ஆனாலும் இவை அனைத்தையம் சமாளித்து முன்னேற முடிகிறது. இந்த தடங்கல்களை கண்டு சோர்ந்து விடாமல், துவண்டு விடாமல் அவைகளை எதிர்போராடி, வெற்றி கொண்டு மேலும் முன்னேற உத்வேதகத்தோடு செயல்பட வேண்டியுள்ளது. அப்பணியில்  நாம் தனித்து நிற்கவில்லை.

நம்மோடு தோளோடு தோள் சேர்ந்து அணிதிரள கோடானுகோடி மக்கள் உள்ளனர். அவர்களை தயார் செய்ய வேண்டிய பெரும் பணியே இன்று நம் முன் உள்ள கடமை. ஓர் இடத்தில் மாமேதை லெனின் கூறுகிறார்:

“ஒரு தனி மனிதன் எந்த அளவுக்கு முக்கியமானவன்?”

“சமுதாயத்தில் உள்ள ஏற்றதாழ்வுகளை (சுரண்டுவதையும் சுரண்டப்படுவதையும்) கணித்து, அதனால் பாதிக்கப்பட்ட மக்களை அணுகி, அந்த அநீதியை எதிர்த்து போராட தயார் செய்து, அந்த போராட்டத்தில் அவர்களை ஈடுபடுத்துவதில் எந்த அளவுக்கு ஒரு மனிதன் வெற்றி பெறுகிறானோ அந்த அளவுக்குதான் அவன் முக்கியமானவன்.”

அதாவது சமுதாய மாற்றம் என்பது ஒரு தனி அவதார புருஷனால் மட்டுமே- அவன் தனிப்பட்ட செயல்கள் மூலமே (உண்ணாவிரதம் etc.) சாதித்துவிட முடியுமென்பது அபத்தமானது. 

நமது நாட்டு சுதந்திர போராட்ட வரலாறே அதற்கு ஒரு தெளிவான சான்று.

இந்த நாட்டுக்கு சுதந்திரம் கேட்டது தவறா? ஆனால் இந்த கோரிக்கையை ஆதரித்து பேரியக்கங்கள் நடத்தாதவரை இதை நாம் பெற முடியவில்லை. 1942-1946 நிகழ்ச்சிகள் இதைத்தான் எடுத்துக்காட்டுகின்றன. 1946 - எத்தனை வேலைநிறுத்தங்கள்- எவ்வளவு பேர் பங்கு கொண்டனர். “சுதந்திரம் தா” என்று கேட்பதைவிட்டு “வெள்ளையனே வெளியேறு” என்று அறைகூவலையும் விட்டு, இந்நாட்டு உழைப்பாளி மக்களின் பெரும் பகுதி நேரடி போராட்டத்தில் இறங்கி, மற்றொரு பகுதி ஆயுத படையினர் - கப்பற் படையினர் ஆங்கிலேயரின் Union Jack கொடியை ஒவ்வொரு கப்பலின் கொடி மரத்திலிருந்து இறக்கி, மூவர்ண காங்கிரஸ் கொடி, அரிவாள் சுத்தி தாங்கிய பொதுவுடைமை கட்சி கொடி, முஸ்லீம் லீகின் கொடி ஆகியவற்றை ஒவ்வொரு கப்பலிலும் ஏற்றிய மறுநாள்தான் 21.2.46 (from memory – it must be correct) இந்தியாவுக்கு சுதந்திரம் என்ற முடிவை லண்டனில் இருந்த ஆங்கில ஆட்சி முடிவெடுத்தது.

பின்னர் நடந்தது வேறு கதை. ஆனால் ஒரு பிரச்சனையால், சீர்கேட்டால், அடக்குமுறையால், சுரண்டலால் பாதிக்கப்பட்ட மக்கள் தான் அதை போக்கிக்கொள்ள பாடுபட வேண்டும். தியாகம் செய்ய வேண்டும். எந்த அளவுக்கு Quantity வளருகிறதோ அந்த அளவுக்குதான் கிடைக்கும் பலனின் quality இருக்கும். “அளவு மாற மாற குணம் மாறும்” இந்த குணமாற்றம் மீண்டும் அளவு மாற்றத்தை உண்டாக்கும்.

இவையெல்லாம் நீ முன்பே கூட கேட்டு இருப்பாய். ஆனாலும் இவைகளை இன்று உனது 18 வயது நிறைவு நாளில் கவனப்படுத்த வேண்டியது அவசியம் என நினைத்து எழுதுகிறேன். மேலும் நிறைய எழுத ஆசை. ஆனால் மூன்று நாட்களாக அலுவலகத்தில் மிக அதிகமான எழுத்து வேலை. ஆக கை குடைச்சல். அதிகம் எழுத முடியவில்லை.

முடிவாக பாதகம் செய்வோரை மோதி மிதிக்கும் சமுதாயத்தை உருவாக்குவதில் உனக்கும் ஒரு சிறப்பான பங்கு இருக்க வேண்டும். புறக்கணிக்கப்பட்ட மக்களை ஒன்றுதிரட்டி ஒரு மாபெரும் போராட்டத்தை, புதிய பாரத யுத்தத்தை நடத்த பாடுபடும் இயக்கத்தில் நீயும் ஒருவனாக இருந்து சிறப்புற செயலாற்றி உனக்கென்று ஒரு மறுக்க மறக்க முடியாத இடத்தை பிடிக்க வேண்டுமென்று விழைகிறேன். இப்பெரும் பணியை நிறைவேற்றவல்ல உடல் வலுவும், மனோதிடமும், நீண்டு வாழும் நிலையும் பெறுவாயாக! எனது நல்லாசிகள் உனக்கு உரித்தாகுக.

அன்புள்ள

அப்பா

பி.கு. எங்கள் அனைவரின் அன்பும் ஆதரவும் உனக்கு உறுதுணையாக நிற்குமென மல்லிகா* கூறுகிறாள்.

*சி பி கிருஷ்ணனின் மூத்த சகோதரி

Comments