எனக்குள் ஒருவர்
தோழர் சி.எஸ்.பஞ்சாபகேசன் நூற்றாண்டு.
பதிவு:31
எனது இளைய சகோதரன் சி பி சந்திரசேகரன் பட்டப்படிப்பு இரண்டாம் ஆண்டு முடித்த உடனே பேங்க் ஆப் இந்தியாவில் கிளர்க்காக பணியில் சேர்ந்து விட்டார். 19 வயதில் துவங்கிய கட்சிப் பணியும் சங்க பணியும் இன்று வரை இடைவிடாமல் தொடர்கிறது. காஞ்சிபுரத்தில் 35க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களுக்கு தலைமை பொறுப்பு ஏற்றுள்ளார். 1974 முதல் 14 ஆண்டுகளில் காஞ்சிபுரத்தில் நேரடியாக நூற்றுக்கும் மேற்பட்டவர்களை கட்சியில் ஈர்த்து இணைத்துள்ளார். அவர்களில் பலர் பின்னாளில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு தலைமை தாங்கும் பொறுப்பை ஏற்றுள்ளார்கள். அதன் பிறகு சென்னையில் மார்க்சிஸ்ட் கட்சியின் பல்வேறு பொறுப்பில் திரும்பட செயலாற்றி உள்ளார். அவர் எங்களது தந்தை தோழர் சி எஸ் பஞ்சாபகேசன் நினைவு நாளில் தனது நினைவை பகிர்ந்துள்ளார்.
*"எனக்குள் ஒருவர்..."*
*ஒரு அநீதியை கண்டு உணர்ச்சிவசப்பட்டு வெகுண்டு எழும் இளைஞனை பார்த்து 40 வயதிற்குள் நீ ஒரு கம்யூனிஸ்ட் ஆக இல்லை என்றால் உனக்குள் ஏதோ கோளாறு என்று அர்தம். அதே 40 வயதை தாண்டிய பிறகும் நீ கம்யூனிஸ்ட் ஆக இருந்தால் அப்போதும் உனக்குள் ஏதோ கோளாறு என்ற முதலாளித்துவ கருத்தை போகிற போக்கில் சொல்லுவார்கள்.*
*சிறு வயது முதல் மகத்தான கம்யூனிஸ்ட் தத்துவங்களை மனதில் ஏற்றி 70 வயதிலும் கொள்கை பிடிப்புடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இருந்து வருகிறேன். தத்துவ புரிதலும், பிடிப்பும் ஸ்தாபன கட்டுப்பாடும் இல்லாதவர்கள் வெகு விரைவில் தடம் புரண்டு விடுவார்கள்.*
*கம்யூனிஸ்ட் தத்துவங்களை புரிதலோடு செயல்படுபவர்களாக எங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் உருவாக்கிய எனது தந்தை தோழர் சிஎஸ்பி எங்களை செதுக்கிய அற்புத சிற்பி.*
*ஸ்தாபன ரீதியாகவும் தத்துவார்த்த ரீதியாகவும் பீடு நடை போடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு தனது இறுதி மூச்சு வரை மக்கள் சேவைக்காகவும் ஸ்தாபன வளர்ச்சிக்காகவும் அயராவது பாடுபட்டவர் என் அருமை அப்பா தோழர் சிஎஸ்பி.*
*நான் மாணவ பருவம் முதல் அவர் நடத்தும் தத்துவார்த்த வகுப்புகளிலும் அவர் உரையாற்றும் கூட்டங்களிலும் கலந்துகொண்டு கவனிப்பது வழக்கம். குறிப்பாக எங்கள் வீட்டில் என் அப்பாவை பார்க்க பிரச்சனைகளோடு சில துறை சார்ந்த தோழர்கள் வருவார்கள். அவர்கள் அனைவரும் அந்த பிரச்சினைகளைப் பற்றியும் அதற்கான தீர்வு பற்றிய தங்களுடைய கருத்துக்களை மாறி மாறி முன் வைப்பார்கள். ஒருவர் பேசுகின்ற போது மற்றவர் அதன் மீது உடனடியாக கருத்து சொல்வதும் இப்படியாக கருத்து பரிமாற்றங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும். ஆனால் என் அப்பா கடைசி வரை அனைவர் பேசுவதையும் உன்னிப்பாக கவனித்துக் கொள்வார், அவ்வப்போது தேவையின் அடிப்படையில் சிறு குறிப்பு எடுத்துக் கொள்வார். கடைசியாகத்தான் தனது கருத்தை அவர் முன்வைப்பார்.*
*அப்போது நான் அவரை கேட்பதுண்டு. நீங்கள் ஏன் எப்போதும் கடைசியாக உங்களுடைய கருத்துக்களை சொல்கிறீர்கள், மற்றவர்கள் எல்லாம் அவ்வப்போது இடை மறித்து தங்களுடைய கருத்துக்களை பேசுகின்ற போது நீங்கள் ஏன் மௌனமாக இருக்கின்றீர்கள், இதன் பொருள் என்ன என்று கேட்டேன். அதற்கு அவர் சொன்னார் எப்போதுமே ஒரு பிரச்சனையில் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று நிலை எடுக்கக் கூடாது. அந்த பிரச்சினையின் முழு பரிமாணத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும். அனைவரின் கருத்தின் தன்மையை புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு பிறகு கடைசியாக நாம் நமது கருத்தை சொல்லுகின்ற போது அனைவருடைய கருத்தும் ஆலோசனைகளும் உட்பட்டதாக ஒட்டுமொத்த முடிவாக அதை மாற்ற முடியும் என்று கூறினார்.*
*ஆகவே விவாதிக்கும் கூட்டங்களில் பொறுமை காத்தல் என்பது மிக மிக அவசியம் என்று தெரிந்து கொண்டேன்.*
*அன்று முதல் இன்று வரை எனது அன்றாட வாழ்க்கையிலும் என் தொழிற்சங்க செயல்பாட்டிலும் இந்த நடைமுறையை மிகவும் வெற்றிகரமாக கடைபிடித்து எனது கருத்து, கூட்டு கருத்தாக மாறி இருக்கும் அதிசயங்களை நான் அனுபவித்து இருக்கிறேன்.*
*அப்படிப்பட்ட ஒரு மகத்தான வழிகாட்டி, தத்துவ ஆசான் இன்றும் எனக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் எனது பாசமிகு தந்தை சிஎஸ்பி யின் நினைவு நாளாகிய (31.05.2024) இன்று எனது கருத்தை பதிவிடுவதில் பெருமைப்படுகிறேன். இந்த ஆண்டு 2024 அக்டோபர் 10 அவர் நூறாவது பிறந்தநாள் ஆண்டாக இருப்பதில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கிறேன்.*
*சி.பி.சந்திரசேகரன்*
Comments
Post a Comment