சங்கிகளின் பிடியில் சிக்கியிருப்பேன்.

அப்போது நாங்கள் வேலூர் ஓல்டு டவுன் தோல் கிடங்கு தெருவில் குடியிருந்தோம். அருகிலிருந்த உத்திர மாதா கோயில் தெருவின் வழியாக சிறிது தூரம் சென்று இடது புறம் திரும்பினால் கானாறு. அதன் மீதான சிமெண்ட் ஸ்லாப்பை கடந்து சென்றால் சுப்ரமணிய சாமி கோவிலின் பின்புறம் பெரிய காலி மனை இருக்கும். கோவிலுக்கு சொந்தமானது. அங்குதான் அந்த பகுதியின் சிறுவர்கள் விளையாடுவோம். ஒருநாள் சைக்கிள் கடை ஓனரின் மகனும் கடையில் வேலை செய்யும் ஆறுமுகமும் காலி மனையின் மைய இடத்தை சுத்தம் செய்து வட்ட வடிவமாக கோடு போட்டு மையத்தில் காவி கலர் கொடியை நட்டார்கள். வேட்டியை அவிழ்த்து உள்ளே அணிந்திருந்த காக்கி அரை டவுசருக்குள் வெள்ளை சட்டையை நுழைத்து விட்டு கொடிக்கு அருகில் வந்து மார்புக்கு இணையாக கையை மடித்து "நமஸ்தே சதவத்சலே மாத்ரு பூமி" என்று பாடினார்கள். பிறகு சிறுவர்களாகிய எங்களை அழைத்து கம்பு (தண்டா) சுற்ற கற்றுத் தருகிறோம் என்று அழைத்தார்கள் நாங்களும் மகிழ்ச்சியுடன் கம்பு சுற்றினோம். பிறகு வட்டமாக அமர வைத்து தினமும் விளையாடுவதற்கு 'ஷாகா'வுக்கு வாங்கன்னு சொன்னார்கள்.  இறுதியாக ஜண்டாவுக்கு வணக்கம் செய்ய கற்று தந்தார்கள். ஜீ என்றுதான் கூப்பிட வேண்டும் என்றார்கள்‌. 

இரண்டு மூன்று நாட்களுக்கு பிறகு நாங்கள் ஷாகாவுக்கு போவது பற்றி கேள்வி பட்ட அப்பா, யாரெல்லாம் போறீங்க என்று விசாரித்தார். நவீன் உங்களுடன் வருவதில்லையா என்று குறிப்பிட்ட நண்பனை பற்றி கேட்டார். முதல் நாள் வந்தான். அப்புறம் வருவதில்லை என்றேன். அவனையும் கூட அழைத்து போங்க என்றார். 

அன்று மாலை ஷாகா போகும் போது. நவீனை அழைத்தோம். 

"என்னை வரவேண்டாம் என்று ஆறுமுகம் ஜீ சொல்லிட்டாரு" என்றான்.  "உன்னுடைய அப்பா பேர் என்ன என்று கேட்டார். அந்தோனி என்று சொன்னேன். ஷாகாவில் இந்துக்கள் மட்டும் தான் சேர்ப்போம் என்று சொல்லிவிட்டார்" என்றான்.

எனக்கு வியப்பாக இருந்தது. அன்று ஷாகா போகாமலேயே திரும்பி வந்துவிட்டேன். மறுநாளும் போகவில்லை. மூன்றாம் நாள் ஆறுமுகம் ஜீயே இன்னொரு ஜீயை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தார். நாங்கள் குடியிருந்த வீட்டின் முகப்பில் 'ரெட் ஹவுஸ்' என்று எழுதியிருக்கும். வீட்டின் சொந்தக்காரர்  தக்கோலம் உயர் நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர். கம்யூனிஸ்ட் அனுதாபி. முகப்பு வராண்டாவில் மார்க்ஸ், எங்கல்ஸ், லெனின், ஸ்டாலின் ஆகியோரின் பெரிய அளவு படங்கள் மாட்டியிருந்தார். இரண்டு ஜீக்களும் அவற்றைப் பார்த்தனர். என்ன ஏது என்று கூட கேட்கவில்லை. நானாகவே நவீன் வரக் கூடாது என்றால் நாங்க யாரும் வர மாட்டோம் என்றேன். குடிக்க தண்ணி கேட்டு வாங்கி குடிச்சிட்டு கிளம்பிட்டாங்க‌. 

நவீனை அழைத்து போகச் சொல்லி அப்பா அன்று சொல்லாமல் இருந்திருந்தால் சங்கிகளின்  பிடியில் சிக்கியிருப்பேன்.

Comments

Popular posts from this blog

My periappa and periamma

GDS ஊழியரை Group E ஊழியராக்குக

மார்க்சியம் வெற்றி பெற மூன்று தளங்களில் போராட்டம்