போலீஸ் ஆளும் வர்க்கத்தின் அடக்கு முறை

அப்பா வேலூர் கோட்டைக்குள் இருந்த கலக்டரேட் அஞ்சலகத்தில் போஸ்ட் மாஸ்டராக வேலை செய்து கொண்டிருந்தார். பள்ளி விடுமுறை நாட்களில் அவருக்கு வீட்டிலிருந்து மாலை சிற்றுண்டி அண்ணனோ நானோ எடுத்து செல்வோம். அப்போது கோட்டைக்குள் போலீஸ் பயிற்சி கல்லூரி இருந்தது. ஜலகண்டேஸ்வரர் (சிலை நிறுவப்படாத)  கோவில் எதிரில் உள்ள மைதானத்தில் போலீஸ் பயிற்சி மாணவர்களுக்கு வீர நடை, லத்தி சுழற்றுதல் போன்ற வகுப்புகள் நடை பெறும். சிறிது நேரம் நின்று ஆர்வத்துடன் வேடிக்கை பார்ப்பது வழக்கம். அப்பா சிற்றுண்டி சாப்பிட்டதும் காலி பாத்திரங்களை வாங்கிக் கொண்டு வீடு திரும்புவோம்‌. 

ஒரு நாள் சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டே  "போலீஸ் பயிற்சியில் இன்று என்ன பார்த்தாய்?" என்று  அப்பா கேட்டார். 

"லத்தி சார்ஜ்" என்றேன். 

"என்ன கருத்தை பதிய வைத்தார்கள்?" அடுத்த கேள்வி.

"அத்தனை ஊன்றி பார்க்கவில்லையே" என்று முழித்தேன்.

"போய் மீண்டும் பார்த்து விட்டு வா" என்றார்.

போலீஸ் குழுவினர் இரண்டு குழுக்களாக பிரிந்து ஒரு குழுவினர் ஆர்ப்பாட்டக்காரர்களாகவும் மீதி பிரிவினர் லத்தி சார்ஜ் செய்வதாகவும் பயிற்சி நடை பெற்று கொண்டிருந்தது. ஆர்ப்பாட்டகார்களைப் போல் நடித்த பிரிவினர் தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக, கூலி உயர்வு கொடு என்று கோஷமிட்டவாரே முன்னேறினர். போலீஸ் குழுவினர் "சார்ஜ்" என்று வெறிக் கூச்சலிட்டுக் கொண்டே ஆர்ப்பாட்டகாரர்களை லத்தியால் தாக்கினர்.

எனக்கு வியப்பாக இருந்தது. அஞ்சலக ஊழியர்கள் இதே கோரிக்கைகளை ஆர்ப்பாட்டங்களில் முழங்குவதை பார்த்திருக்கிறேன். அப்பா முன்னின்று நடத்தியிருக்கிறார். இவர்களை ஏன் தாக்க வேண்டும்? இவர்களை தாக்குவதற்கு போலீஸுக்கு பயிற்சியா? இந்த கேள்விகள் மெல்ல மெல்ல என்னுள் எழுந்தன. போலீஸ் என்றால் திருடனை பிடிக்கவும், சமூக விரோதிகளை கைது செய்வதற்கும் தான் என்று நினைத்துக் கொண்டிருந்த எனக்கு போலீஸ் ஆளும் வர்க்கத்தின் அடக்கு முறை கருவி என்பதை புரிந்து கொள்வதற்கான, வர்க்கப் பார்வையுடன் உற்று நோக்குவதற்கான பயிற்சியை அன்று அப்பா எனக்கு துவங்கி விட்டார்.

Comments

Popular posts from this blog

My periappa and periamma

GDS ஊழியரை Group E ஊழியராக்குக

மார்க்சியம் வெற்றி பெற மூன்று தளங்களில் போராட்டம்