தோழர் CSP சிறந்த மதியூகி!
- K.ராகவேந்திரன்
முன்னாள் மாபொதுச்செயலர் - NFPE
தோழர் CSP குறித்து நிறைய நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என நான் கருதுகிறேன். அவரது நூற்றாண்டு தொடக்கம் ஒரு நல்வாய்ப்பாக அமையட்டும்.
முதலில் தோழர் CSP ஒரு சிறந்த மதியூகி என்பதை நான் அறிந்து கொண்ட ஒரு நிகழ்வின் மூலம் கூறுவது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.
நான் முதன் முதல் ஒரு பார்வையாளனாகக் (observer) கலந்து கொண்ட அஞ்சல் மூன்று மாநில மாநாடு அது. தோழர் A.பிரேமநாதன் தலைவராகச் செயல்பட்டதும், தோழர் A.S.ராகவன் மாநிலச் செயலராகச் செயல்பட்டதும் அந்த மாநில மாநாட்டில் தான். உள்நாட்டு அவசரநிலை திருமதி இந்திராகாந்தியால் அமல்படுத்தப்பட்டு பல்வேறு ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டிருந்த காலம் அது. 1976 என்று கருதுகிறேன். பிளவுபட்டிருந்த NFPTE சம்மேளனத்தில் ஒற்றுமை உருவாக்கப்பட்டிருந்த காலம். அதேசமயம் சம்மேளன இயக்கத்தில் புதிய சிக்கல் நிலவிய காலம். சேலத்தில் மாநில மாநாட்டைக் கூட்டியிருந்தார்கள்.
தோழர் CSP ஒரு பிரதிநிதியாக வேலூர் கோட்டத்தில் இருந்து கலந்து கொண்டிருந்தார். தோழர் சுதாகரன் கோவை கோட்டத்தின் பிரதிநிதிகளில் ஒருவர். அவசரநிலையைத் தோலுரிக்க வேண்டும் என்பது முற்போக்கான சிந்தனையுடைய தோழர்களின் கருத்து. அதற்கொப்ப "மத்திய அரசுக்கு அரசியல் உறுதியில்லை" என்ற அடிப்படையில் ஒரு திருத்தத்தை ஆண்டறிக்கைக்கு தோழர் CSP முன்மொழிந்திருந்தார். ஆனால் தோழர் CSP-ஐ பேச அந்தத் திருத்தத்தில் பேசுவதற்கு அனுமதியளிக்கக்கூடாது என்று மாநாட்டுத் தலைவர் தோழர் A பிரேம நாதன் முடிவெடுத்திருந்தார். ஆகவே எதிர்பாராத வகையில் தோழர் CSP அளித்த திருத்தத்தை ஏற்றுக்கொள்வதாகத் தலைவர் அறிவித்தார்.
இந்த எதிர்பாராத அறிவிப்பு மத்திய அரசுக்கு எதிரானது தான். ஆனால் ஆண்டறிக்கை ஏற்கனவே அச்சாகியிருந்தது; அதன்படி அரசுக்கு எதிரான கருத்து அதில் இல்லை. மேலும் தோழர் CSP மத்திய அரசுக்கு எதிராகப் பேச அனுமதிக்கக் கூடாது என்பதும் நிறைவேறிவிடும். ஆகவே மிகச் சாமர்த்தியமாகத் தலைமை அப்படி முடிவெடுத்திருந்தது. வேறு யாராக இருந்தாலும் தலைமையின் இந்த சதிக்கு இரையாகி இருப்பார்கள். ஆனால் தோழர் CSP எதையும் எதிர்பார்த்து தயாராக இருந்தார் என்பது அவர் ஒரு சிறந்த மதியூகி என்பதை உணர்த்தியது.
அப்படி அவர் என்னதான் செய்தார் என்ற கேள்வி உங்களில் பலருக்கு எழுகிறதல்லவா?
தலைமை இப்படி ஏதாவது செய்வார்கள் என்று முன்கூட்டியே தோழர் CSP எதிர்பார்த்து, தோழர் சுதாகரைத் தயார் செய்திருந்தார் போலும். தோழர் சுதாகர் மேடைக்கு சென்று தான் தோழர் CSP-யின் கருத்தை ஏற்கவில்லை என்று சொல்ல, உடனே தோழர் CSP திருத்தத்தை முன்மொழிந்தவர் என்ற வகையில் மேடைக்கு சென்று மைக் முன்னால் மிக விளக்கமாக எப்படி மத்திய அரசுக்கு அரசியல் உறுதி இல்லை என்பதை விவரித்துத் தன் திருத்தம் ஏற்கப்பட்டது சரியே என்று வாதிட்டார்.
தோழர் சுதாகரனும் தோழர் CSP-யும் ஒத்த கருத்துக் கொண்டவர்கள் என்ற போதிலும், தோழர் சுதாகரன் எதிர்ப்பது போல் எதிர்க்க, தோழர் CSP அதைப் பயன்படுத்தி மாநாட்டில் விரிவாக அவசரநிலையை எதிர்த்துப் பேசியது அனைவரது பாராட்டுக்களையும் பெற்றது. மேலும் தோழர் CSP ஒரு தலைசிறந்த மதியூகி என்பதையும், மதியால் எந்த சூழலிலும் நாம் விரும்பும் சரியான கருத்துக்களை ஆழமாக மற்றவர் முன் வைக்க இயலும் என்பதை என்போன்ற அன்றைய இளைஞர்களுக்கு பாடத்தை மிகவும் நளினமாக நடைமுறையாகக் கற்றுக்கொடுத்தார் என்பதே உண்மை.
தோழர் CSP புகழ் இன்றைய புதிய தலைமுறையினருக்கு ஒரு வழிகாட்டியாக அமையும். மேலும் சில அனுபவங்களை எதிர்காலத்தில் பகிர விழைகிறேன்.
Comments
Post a Comment