பூணல்
அப்பாவின் அம்மா ஆசாரம் மிகுந்தவர்கள். சித்தப்பா வீட்டிலும் எங்கள் வீட்டிலும் மாறி மாறி இருப்பார்கள். எங்கள் வீட்டில் இருக்கும் போது நாங்கள் அனைவருமே அவருக்கு ஏற்ற வகையில் நடந்து கொள்வோம். இருந்தாலும் 'பூஜை புனஸ்காரம்' எல்லாம் விட்டு விட்டார்கள் என்று புரிந்து விட்டது. பூணலாவது இருக்கிறதா என்ற கேள்வி அவருக்கு இருந்தது. தன் தாயார் வருத்தப்படக் கூடாது என்பதற்காக அவருக்கு தெரியும் வகையில் அப்பா திருமணமானவர்கள் அணியும் இரட்டை பூணலை அணிந்து கொள்வார்.
அம்மாவின் அம்மா அருட் பெருஞ்சோதி, தனிப் பெரும் கருணை வழி. அப்பாவின் முற்போக்கான நிலைப்பாடுகளையும் புரிந்து கொள்வார். இருந்தாலும் பழக்க வழக்கங்களை கைவிட்டு விடுவதில் சிறிது அச்சம் அவருக்கு உண்டு. அவை குறித்து அப்பாவோடு பேசுவதும், அவரின் விளக்கங்களை வியந்து புன்னகையுடன் ஆமோதிப்பதும் நடைபெறும்போது அவை குழந்தைகளான எங்களுக்கும் தெளிவை தந்தன.
ஒரு முறை பாட்டி "பெரிய பேரன்கள் இருவரும் கல்லூரியிலேயே சேர்ந்து விட்டார்கள். இன்னும் பூணல் போடாமல் இருக்கலாமா? வரும் ஆனி மாதம் போடலாமே, ஆனியில் இரட்டை பூணல் போட்டால் விசேஷம்" என்றும் கூறிவிட்டு பதிலுக்காக அப்பாவையே பார்த்துக் கொண்டிருந்தார். நாங்களும் ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தோம்.
"ஆனியில் இரட்டை பூணல் போட வேண்டும் தானே?" என்று சிரித்துக்கொண்டே வினவியவாரறே தன் தோளில் இருந்த இரட்டை பூணலை கழற்றி சுவற்றில் இருந்த ஆணியில் போட்டுவிட்டார். பாட்டி கல கலவென சிரித்தவாறே "பாரேன், பூணலை கழற்றி ஆணியில் போட்டுவிட்டார்" என்றார் அம்மாவிடம். அம்மாவுக்கும் சிரிப்பு வந்தது. எங்களுக்கு தெளிவு வந்தது.
Comments
Post a Comment