குடும்பத்தாரின் இயக்கப் பற்று

               - ஆர் எஸ் மணி, திண்டுக்கல்.

எழுபதுகளின் துவக்கமது..!!

 அக்காலங்களில் மாநாடுகள் எங்கு நடைபெற்றாலும் தவறாமல் பால்ய சகாக்களான ஆர்.ஜவகர், பால்வண்ணம், பாலு ஆகியோருடன் பேருந்திலோ லாரியிலோ சென்று பங்கேற்பதை வழமையாக, கடமையாகக் கொண்டிருந்த காலகட்டம்.

 தியாகபூமியாம் திருச்சிபொன்மலை தியாகிகள் திடலில் தோழர்கள் பி.ராமமூர்த்தி மற்றும் ஜோதிபாசு பங்கேற்கும் டி.ஆர்.இ.யூ. சங்கப் பொதுக்குழு ( மாநாடு ) , பேரணி, பொதுக்கூட்டம் பற்றிய தகவலறிந்து பங்கேற்க முடிவு செய்தோம் .

முதன்முறையாக தியாகபூமியாம் பொன்மலைத்திடலுக்குள் உணர்ச்சிபொங்க உற்சாகமாக நுழைந்தோம்.

மாநாடு துவங்கியது. மேடையில் ரயில்வே தொழிலாளிகளின் பேரன்பைப்பெற்ற தோழர் கே.அனந்த நம்பியார், தபால்தந்தி ஊழியர் இயக்கத்தின் தன்னிகரற்ற தலைவர் தோழர் கே.ஜி.போஸ், மற்றும் அப்போதுதான் உதயமாயிருந்த சி.ஐ.டி.யூ அமைப்பின் முதல்பொதுசெயலாளர் தோழர் பி.ராமமூர்த்தி ,சி.ஐ.டி.யூ.வின் துணைத்தலைவர் ஜோதிபாசு போன்றோர் அமர்ந்திருந்தனர்.

மாநாட்டை வாழ்த்திப்பேச தோழர். கே.ஜி.போஸ் அழைக்கப்பட்டதும் அவரது ஆங்கில உரையை தமிழில் யார் மொழிபெயர்க்கக்கூடும் என்று நாங்கள் ஊகிக்கும் முன்பே வெள்ளை நிற சட்டை வேட்டியில் , நரைத்த முடியும் வழுக்கைத் தலையுமாக கம்பீரமாக ஒருவர் பேப்பர், பேனா, குறிப்பேடுடன் தோழர் போஸ் அருகில் வந்து நின்றார்.

முற்றிலும் அறிமுகமில்லாத முகம். நாங்க கேள்விப்படாத பெயர் . தோழர் போஸ் உணர்ச்சிகரமான உரையினை நிகழ்த்த , தனது குறிப்பேட்டில் வேகமாக குறிப்பெடுத்துக் கொண்டு மொழிபெயர்ப்புரையினை அனைவரும் அதிசயிக்கும்வண்ணம் கச்சிதமாக நிகழ்த்தி விட்டு அந்தப் பெரியவர் தனது இருக்கையில் அமரும்வரை மாநாட்டு அரங்கமே கைதட்டி வரவேற்று உற்சாகத்தோடும் வியப்போடும் அவரையே கவனித்துக் கொண்டிருந்தது.

 மேடையிலிருந்த தலைமைத்தோழர்களும் அவரது துடிப்பான ஜீவனுள்ள உரையினை ரசித்துக் கேட்டனர்.

தோழர் ஜோதி பாசுவின்  வேண்டுகோளின்படி அவரது ஆங்கில உரையினையும் அந்தத் தோழரே தமிழில் மொழிபெயர்க்க வேண்டி வந்தது. அரங்கம் களைகட்டியது. உணர்ச்சிவசப்பட்டது.

மாலையில் எழுச்சிமிகு பேரணி , முத்தாய்ப்பு நிகழ்வாக தோழர் ஜோதிபாசு பங்கேற்ற பொதுக்கூட்டம். அங்கும் மொழிபெயர்ப்புப்பணியை செவ்வனே செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

 அவர்தான் ...தமிழகத்தின்....தபால்தந்தி ஊழியர் இயக்கத்தின் முதுகெலும்பாகத் திகழ்ந்தவரும் , வேலூர் மா நகரத்தில் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினை உருவாக்கிக் களப்பணியாற்றியவரும் “ உழைக்கும் வர்க்கம் “ மாத இதழின் நிறுவன ஆசிரியருமான சற்றும் அயராத, எதற்கும் யாருக்கும் அஞ்சாத சி.எஸ்.பஞ்சாபகேசன் அவர்கள் ..!!

வேலூரைச் சேர்ந்த எங்கள் வங்கியின் உதவிப்பொதுமேலாளரான திருமிகு திருவேங்கடம் சாரிடம் ஒருதடவை அவர் குறித்து விசாரித்தேன். அவரைத் தெரியுமா என்று கேட்டதுதான் தாமதம்... முகம் பிரகாசிக்க அவர் கூறியது----” தெரியுமாவா..?? மணி...அவர் எவ்வளவு அருமையான அறிவார்ந்த பெரியவர். அவர் இல்லத்துக்கு அவரது மகன் நம்ம பேங்க் ரவிசங்கர் அழைத்துச் சென்றுள்ளார். இரண்டு மூன்று முறை அவரது அரசியல் வகுப்பைக் கேட்டிருக்கேன். பிரியமாகவும் பேசுவார். அதிகாரிகள் தேர்வு எழுதத் தாமதமாகியிருந்தால் , இன்னும் சில வகுப்புகளைக் கேட்டிருப்பேன் ...ஒருவேளை தொழிற்சங்கவாதியாக மாறியிருப்பேன். “என்று அவர் சொல்ல சொல்ல எல்லையற்ற வியப்பும் உவப்புமேற்பட்டது.

தோழர் சி.எஸ்.பி. தனது குடும்பத்தாரையும் இயக்கப் பற்றுதல் கொள்ளச் செய்தார். அவரது பிள்ளைகள் அனைவருமே பின்னாட்களில் தொழிற்சங்கங்களில் தீவிரப் பணியாற்றிட அவரது வழிகாட்டுதல் அமைந்தது.

வாழ்க தோழர் சி.எஸ்.பி.அவர்கள் நாமம்.!!

Comments

Popular posts from this blog

My periappa and periamma

GDS ஊழியரை Group E ஊழியராக்குக

மார்க்சியம் வெற்றி பெற மூன்று தளங்களில் போராட்டம்