தோழர்களின் தோழனாக சி.எஸ்.பி
- ஜே.ரங்கநாதன், முன்னாள் ஆசிரியர் 'உழைக்கும் வர்க்கம்' சென்னை 25.12.2023.
1996 - மே 31 காலை 11.15. டெலிபோன் மணி அடித்தது. ரிசீவரை எடுத்து ஹலோ என்றேன். "உங்களுக்கு செய்தி தெரியுமா?" என்ற கேள்வி மறுபுறத்தில் இருந்து வந்தது. பேசியது தோழர் பி.ஆர்.பரமேஸ்வரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர், மார்க்சிய தத்துவ ஞானி. "சி.எஸ்.பி காலமாகிவிட்டார்" என்று தழுதழுத்த குரலில் கூறிய அவரால் அதற்கு மேல் பேச முடியவில்லை. ரிசீவரை வைத்த நான் அமைதியாக அமர்ந்தேன். எனது துணைவியார் என்னை உலுக்கியபடி "என்ன ஆயிற்று" என்று கேட்ட போது நான் வாய் விட்டு அழுதேன். அந்த அழு குரலில் சி.எஸ்.பி என்று தடுமாறி உச்சரித்தேன். அவர் புரிந்து கொண்டார். உங்களை தைரியப் படுத்திக் கொள்ளுங்கள். புறப்படுங்கள் நானும் வருகிறேன் என்றார். மாதவரத்திலிருந்து புறப்பட்டு கிழக்கு தாம்பரம் தோழர் சி.எஸ்.பி வீடு செல்லும் வரை நாங்கள் எதுவுமே பேசிக் கொள்ளவில்லை. எனது எண்ணங்கள் பின்னோக்கி ஓடின.
தோழர் சி.எஸ்.பி உடனான தொடர்பும் தோழமையும் 1968 மத்திய அரசு ஊழியர் வேலை நிறுத்தத்தையொட்டி ஏற்பட்டது. வேலூரில் இருந்து சென்னை வரும்போதெல்லாம் சிறிது நேரம் சந்திக்கும் வாய்ப்புகள் கிடைத்தன. தொடர்ந்து 1970 விஜயவாடாவில் நடைபெற்ற தபால் தந்தி ஊழியர் சம்மேளன கவுன்சிலுக்குப் பிறகு உறவு நெருக்கமானது. 1971 மத்திய அரசு ஊழியர் இயக்கத்தின் முன்னணிப் படையாக திகழ்ந்த NFPTE சம்மேளனத்தை பிளவு படுத்த காங்கிரஸ் அரசு முடிவு செய்தது. சில தலைவர்கள் அதற்கு துணை போயினர். போர்க் குணமிக்க ஒரு இயக்கத்தை சீர்குலைக்கும் முயற்சிகளுக்கு எதிராக உறுதியாக போராடுபவர்களில் தோழர் சி.எஸ்.பி முக்கியமானவர். தொழிற்சங்க ஜனநாயகத்தை பாதுகாக்கும் போராட்டங்களின் போது எங்களது நெருக்கம் மேலும் இறுக்கமானது.
1972 டிசம்பர் மாதம் டெல்லியில் 'எல்லோருக்கும் போனஸ்' கோரிக்கைக்காகவும் ED ஊழியர் பிரச்சனைகளுக்காகவும் சிறப்பு மாநாடு நடை பெற்றது. அதில் பங்கு கொள்ள சென்னை தொலைபேசியில் இருந்து பத்து தோழர்கள் பயணமானோம். ரயில் கட்டண செலவுக்காக உண்டியல் ஏந்தினோம். ஊழியர் மத்தியில் வரவேற்பும் கிடைத்தது. நாங்கள் பயணம் செய்த அதே ரயிலில் தோழர் சி.எஸ்.பி பயணம் செய்வதாகவும், காசிப்பேட்டில் அவர்களை சந்திக்கும்படியாகவும் எனக்கு தகவல் அனுப்பினார். ஒரு பெட்டியிலிருந்து மறு பெட்டிக்கு போய் வருகின்ற வசதி அப்போது கிடையாது. காசிப்பேட் வந்தது. தோழர் சி.எஸ்.பி பயணம் செய்த பெட்டியைத் தேடிச் சென்றேன். அங்கே தோழர் சி.எஸ்.பி தபால் தந்தி ஊழியர் தொழிற்சங்க வரலாறு வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தார். அதுவரை கேட்டிராத புதிய தகவல்களை கோர்வையாக க் கூறிக் கொண்டிருந்தார். அவரது வகுப்புகளை கேட்ட பல தோழர்கள் பிற்காலத்தில் அத்தகைய வகுப்புகள் எடுப்பவர்களாகவும், தொழிற்சங்க இயக்கத்தின் சிறந்த தலைவர்களாகவும், சோசலிச கருத்தின் பால் ஈர்க்கப்பட்டவர்களாகவும் விளங்கி வந்தனர்.
தோழர் சி.எஸ்.பி வகுப்பெடுக்கக் கூடிய ஆசிரியராக விளங்கியதுடன் மேன் மேலும் கற்றறியக் கூடிய மாணவனாகவும் இருந்தார். வாசிப்பு என்பதை மிகவும் நேசித்தார். அவரது இல்லத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்கள் அடங்கிய 'கபிலர்' நூலகம் என்ற ஒரு நூலகத்தையும் அமைத்து அறிவொளி பிரகாசிக்கச் செய்தார். அந்நூலகத்தில் அரசியல், பொருளாதாரம், வரலாறு, மார்க்சிய தத்துவம் மற்றும் கோட்பாடுகள் தொடர்பான புத்தகங்கள் வீற்றிருந்தன.
ஜாதி மத வேறுபாடின்றி சகல பகுதி மக்களுடன் தோழமையுடனும், நெருக்கமாகவும் பழகக் கூடிய பண்பாளர். ஆரம்ப காலத்தில் மிக வைதீகமாக வளர்ந்தவர். இந்திய சமூகத்தில் ஊன்றி இருந்த அவலங்களைக் கண்டு மனம் நொந்தவர். இந்த நிலைமையை மாற்ற வல்லது ஆன்மீகம் அல்ல. சோசலிச, கம்யூனிச தத்துவமும் நடைமுறையும் தான் தீர்வாக இருக்கும் என்று தன்னை ஒரு தீவிர மார்க்சியவாதியாக மாற்றிக் கொண்டார். அந்த மாற்றம்தான் இயக்கவியல் பொருள்முதல் வாதம் பயின்ற சி.எஸ்.பி என்ற உச்சத்திற்கு அவரை கொண்டு சென்றது.
1972 - "எல்லோருக்கும் போனஸ்" டெல்லி மாநாடு முடிந்ததும் சென்னை திரும்ப ரயில் கிடைக்காததால் டெல்லியில் சில நாட்கள் தங்க வேண்டி வந்தது. அப்போது பயனுள்ள பல விஷயங்களை தோழர் சி.எஸ்.பியுடன் விவாதிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அவற்றை என் தொழிற்சங்கப் பணிகளுக்காக நான் பயன்படுத்திக் கொண்டேன். டெல்லியில் தங்கியிருந்த மற்றோரு தோழரை அறிமுகம் செய்து வைத்தார் தோழர் சி.எஸ்.பி. அந்த தோழர் பின்னாளில் பல மொழிகளைப் பயின்றவராகவும், மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளர் ஆகவும் விளங்கிய தோழர் வி.என்.ஆர் என்று அழைக்கப்பட்ட தோழர் வி.என்.ராகவன்.
டெல்லி சந்திப்பிற்கு பின்னர் அஞ்சல் அட்டை மூலமாக தொடர்பு தொடர்ந்தது. அப்போது தரை வழி தொலைபேசி வசதி கூட கிடைக்கப் பெறாத காலம். அஞ்சல் அட்டை மூலமாக பல தகவல்களை பகிர்ந்து கொண்டதுடன் குடும்ப நலன் மற்றும் கல்வி பற்றிய தகவல்களையும் தவறாது தோழர் சி.எஸ்.பி கேட்டறிவார்.
1974ல் பொதுத்துறைக்கு ஈடான ஊதியம், போனஸ் மற்றும் காசுவல் ஊழியர் நிரந்தரம் ஆகிய முக்கிய கோரிக்கைகளை முன் வைத்து இரயில்வே ஊழியர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டபோது, அந்த கோரிக்கைகள் மத்திய அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும் பொதுவான கோரிக்கை என்பதால் ரெயில்வே ஊழியர் வேலை நிறுத்தத்துடன் தபால் தந்தி தொலைபேசி ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட வேண்டும் என்ற நிலைப்பாட்டினை கே.ஜி.போஸ் தலைமையிலான சம்மேளனம் முடிவெடுத்தது அதற்கான வலுவான பிரசாரத்தை தமிழகம் முழுவதும் வலுவாக எடுத்து சென்றதில் தோழர்கள் சி.எஸ்.பி., பி.வி.சுப்ரமணியன், எஸ்.சந்திரசேகரன் ஆகிய தலைவர்கள் முக்கியமானவர்கள்.
அப்போது நான் சென்னை நகர தபால் தந்தி ஊழியர் சங்கங்களின் இணைப்புக் குழு செயலாளராக இருந்தேன். சென்னை நகரில் உள்ள தபால் தந்தி தொலைபேசி ஊழியர்கள் மத்தியில் மட்டுமின்றி ரயில்வே ஊழியர் போராட்ட தயாரிப்பு பணிகளிலும் ஈடுபட நான் பணிக்கப் பட்டேன். அதற்கு தோழர் சி.எஸ்.பி அவர்களின் வழிகாட்டல் பெரிதும் உதவின. "ஒற்றுமை என்பது எதற்காக? யாருக்காக? என்ற கேள்வியை எழுப்பி, "ஒற்றுமையும் போராட்டமும்" என்ற எழுச்சிகரமான கோஷத்தை உயர்த்திப் பிடித்தார் தோழர் சி.எஸ்.பி. ரயில்வே ஊழியர் இயக்கத்திலும், தபால் - தந்தி ஊழியர் இயக்கத்திலும் தொழிலாளர் நலன்களுக்கு எதிராகவும், அரசின் தவறான கொள்கைகளுக்கு ஆதரவாகவும் சில தலைமைகள் தலை தூக்கின. அவற்றிற்கெதிராகவும் அவர்களது தொழிலாளர் விரோத போக்கினை கடுமையாக விமர்சித்தும் தனது கருத்துக்களை தோழர் சி.எஸ்.பி பதிவு செய்து வந்தார்.
தொழிலாளி வர்க்கம் நாட்டு நடப்பை நன்றாக புரிந்துக் கொள்ள வேண்டும். தொழிற்சங்கம் என்பது பல்வேறு அரசியல் கருத்தோட்டம் கொண்டவர்களையும் எந்த அரசியலையும் புரிந்து கொள்ள முடியாதவர்களையும் உள்ளடக்கியதாகும். அதனுடைய தனித்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும் என்பது அவசியம். அத்துடன் அவர்கள் போராட்ட களத்தில் ஈடுபடும்போது, எந்த தலைமை நம் பக்கம் உறுதியாக நிற்கிறது என்பதை உணருவார்கள். அந்த உணர்வை தொழிலாளி வர்க்க உணர்வாக மாற்றிட வேண்டும் என்பதும் அவசியம். இந்த வழி காட்டலை தோழர் சி.எஸ்.பி. அவர்களது வகுப்பில் அழுத்தமாக கூறுவதுண்டு.
1980 ஆம் ஆண்டு தோழர் சி.எஸ்.பி இலாகா பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று சென்னைக்கு குடியேறிய நாள் முதலாய் அவருடனான நெருக்கம் அதிகரித்தது. அதன் காரணமாக தொழிற்சங்க வகுப்பெடுக்கவும் பணியினை எனக்கு பணித்தார். தொடர்ந்து 'உழைக்கும் வர்க்கம்' பத்திரிகை பணியிலும் என்னை பங்கெடுக்கச் செய்தார். பத்திரிக்கையில் வரக்கூடிய செய்திகள் சாதாரண ஊழியர்களையும் சென்றடைய வேண்டும் என்பதில் அவர் அதிக கவனம் செலுத்தியதுடன், எழுத்துப் பிழைகள் வந்து விடக்கூடாது என்பதற்காக அவரே பிழைகளை திருத்தி முறைப்படுத்தி வந்தது என்னை மிகவும் கவர்ந்தது. அத்தகைய நினைவுகளையும், நிகழ்வுகளையும் அடுக்கடுக்காய் சொல்ல முடியும். அவற்றை ஒரு நூல் வடிவத்தில் கொண்டு வர முடியும்.
தபால் தந்தி தொலைபேசி ஊழியர் தொழிற்சங்க இயக்கத்தில் அகில இந்திய அளவில் ஆர்.எம்.எஸ் ஊழியர் சங்கம், தபால்காரர் ஈடி ஊழியர் சங்கம், நிர்வாகப் பிரிவு ஊழியர் சங்கம் ஆகிய சங்கங்கள் முறையே தோழர்கள் என்.ஜே.அய்யர், கே. ஆதி நாராயணா, எல்.ஏ.பிரசாத் ஆகியோர் தலைமையில் அமைந்து ஊழியர் நலன்களுக்காக பெருமளவு பங்காற்றி வந்தன. தொலைபேசி துறையில் இன்ஜினியரிங் மூன்றாம் பிரிவு மற்றும் இன்ஜினியரிங் நான்காம் பிரிவு சங்கங்கள் மற்றும் தந்தி போக்குவரத்து நான்காம் பிரிவு ஊழியர் சங்கம் மற்றும் ஆர்.எம்.எஸ் நான்காம் பிரிவு ஊழியர் சங்கம் ஆகிய சங்கங்கள் அரசாங்கத்துடன் கைகோர்த்து செல்லும் திருத்தல் வாதத் தலைமையிலான ஓம் பிரகாஷ் குப்தாவின் பிடியில் இருந்தன. தந்தி போக்குவரத்து மூன்றாம் பிரிவு சங்கத் தலைமை வி.ஏ.ஹர்சுல்கர் என்ற வலதுசாரி யின் தலைமையில் இயங்கி வந்தது. இது தவிர காங்கிரஸ் கட்சியின் தொழிற்சங்கப் பிரிவான ஐ.என்.டி.யூ.சி ஆதரவு சங்கங்களும் இருந்தன. மேற்குறிப்பிட்ட அமைப்புகளின் சங்கங்களாக மாநில அளவிலான சங்கங்களும் இயங்கி வந்தன. இந்த தலைமைகள் எல்லாம் பதவி மற்றும் நிர்வாகத்திடம் இருந்து பெறப்படும் சலுகைகளுக்காகவே இயங்கி வந்தன. ஊழியர்களின் உண்மையான விருப்பங்களை மறைத்து அவர்கள் நலன்களைப் புறக்கணித்தன.
தமிழகத்தில் அந்த தலைமைகள் நடத்தி வந்த பத்திரிகைகள், செய்தி சுற்றுகள் உண்மையினை மறைத்து ஊழியர் விரோத பதிப்புகளை வெளியிட்டு வந்தன. அந்த நிலையினை மாற்றும் முயற்சியாக உருவானதுதான் 'உழைக்கும் வர்க்கம் ' பத்திரிக்கை. அதன் நிறுவன ஆசிரியராக தோழர் சி.எஸ்.பி. பொறுப்பேற்றார். மேலும் தொழிலாளர் நலன் மற்றும் அவர்களுக்கான போதிய கல்வி பயிற்றுவிப்பமைக்காக ஒரு அறக்கட்டளை ஏற்படுத்தி அதற்கான ஒரு அலுவலகம் அமைத்து அதன் மூலமாக உழைக்கும் வர்க்கம் பத்திரிகையை வெளிக்கொண்டு வருவது என்பதை தோழர் சி.எஸ்.பி தனது வாழ்நாள் கனவாக கொண்டிருந்தார். அதற்கான நிதியினை ஊழியர்களிடம் இருந்து நன்கொடையாகப் பெற்று செயல் படுவதற்கான ஏற்பாடுகள் முறையாக செய்யப்பட்டன. ஆனால் பதிவு செய்யப்பட்ட கட்டிடப் பிரிவினை குறிப்பிட்ட காலத்தில் ஒப்படைக்காமல், தொடர்ந்து பணம் பறிக்கும் நோக்கத்துடன் கட்டிடப் பணியை தாமதப் படுத்தி வந்தார் பில்டர். அதன் காரணமாக தோழர் சி.எஸ்.பி மன உளைச்சலுக்கு உள்ளாக்கப் பட்டார். அவரது மறைவுக்குப் பின்னரும் பில்டர் பல சிக்கல்களை ஏற்படுத்தியதுடன், அலுவலகத்தை பெறும் முயற்சிகளில் ஈடுபட்ட தோழர்கள் மீது ரவுடிகளைக் கொண்டு தாக்குதலையும் தொடுத்தார். அந்த சூழ்நிலை தொடராமல் இருக்க நியாயம் வேண்டி நுகர்வோர் குறை தீர்க்கும் மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, பின்னர் நீதி மன்றத்துக்கு வெளியே தீர்வு காணப்பட்டது.
1998 - மே மாதம் 31 தோழர் சி.எஸ்.பி நினைவு தினத்தன்று சி.எஸ்.பி நினைவகம் என்ற பெயரைத் தாங்கி 'உழைக்கும் வர்க்கம்' பத்திரிக்கையின் அலுவலக திறப்பு விழா தோழர் சி.எஸ்.பி. குடும்பத்தார் முன்னிலையில், என்.எஃப்.பி.இ. சம்மேளனத்தின் துணைப் பொதுச் செயலாளர் தோழர் ஆர்.எல்.பட்டாச்சார்யா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. தோழர் சி.எஸ்.பி அவர்களின் வாழ்நாள் கனவு அதன் மூலம் நிறைவேறியது.
தோழர் சி.எஸ்.பி அவர்களை நினைவு கூறும்போது அவரது குடும்பத்தினரைப் பற்றி குறிப்பிடாமல் போனால் அந்த நினைவு முழுமையடையாது. அவர்களின் துணைவியார் திருபுரசுந்தரி அவர்களின் துணையும், தியாகமும் தோழரின் பொது வாழ்க்கைக்கு முழுக்க முழுக்க பக்க பலமாக இருந்தன. வீட்டுக்கு வருகை தரும் தோழர்களின் நிலைமைகள் பற்றி கேட்டறிவதும், ஆலோசனைகள் வழங்குவதும் அவரது சிறப்பின் வெளிப்பாடாகும். அத்துடன் விருந்தோம்பல் என்பதும் அவரது சிறப்பு குணாம்சம் ஆகும். அத்தகைய விருந்தோம்பலில் எனக்கு நேரடி அனுபவம் உண்டு.
தோழர் அவர்களின் துணைவியார் உட்பட அவரது குடும்பம் முழுவதையும் கம்யூனிசக் கருத்துக்களை ஏற்கச் செய்ததுடன், அண்டை வீட்டு நபர்களுக்கும் மார்க்சிய அடிப்படை வகுப்புகளை நடத்தி அவர்களுக்கும் அரசியல் ஆர்வம் ஏற்படச் செய்தது சி.எஸ்.பி என்ற மார்க்சியவாதியின் சிறப்பு அம்சமாகும்.
தொடர் வண்டி ஓட்டத்துடன் ஓடிய எனது நினைவலைகள் கிழக்கு தாம்பரம் ரயில் நிலையம் வந்ததும் பின்னோக்கி ஓடிய நினைவுகள் நின்றன. மாமனிதன் வாழ்ந்த, இயக்கத்தை வளர்த்த அந்த இல்லத்துக்குள் நுழைந்தோம். அங்கே தோழர் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். சிறிது ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள் என்று குடும்பத்தினரும், தோழர்களும் கூறிய போது எடுக்காத ஓய்வு அனைத்தையும் சேர்த்து இறுதி ஓய்வெடுக்க முடிவு செய்துவிட்டார்.
அவர் நம்மிடையே இல்லாதபோதும் அவரது அறைகூவல் இன்றளவும் நமது காதுகளில் ஒலித்துக் கொண்டுதான் உள்ளது. "தொழிலாளர் ஒற்றுமையை கட்டிக் காத்து அவர்களிடம் தேங்கிக் கிடக்கும் பெரும் சக்தியை ஒன்று திரட்டி நாட்டில் ஒரு சிலர் வாழவும் மிகப் பலர் தேயவும் உள்ள இழி நிலையை எதிர்த்து, மோதி மிதித்து வெற்றி கொண்டு எல்லோரும் இன்புற்றிருக்க ஒரு சோசலிச சமுதாயத்தை அமைத்து தாய் திரு நாட்டின் பெருமையை காக்கும் பெரும்பணியில் நம்மை நாம் அர்ப்பணித்துக் கொள்வோமாக" என்று 1963ல் அவர் எழுதியது, 60 ஆண்டுகள் கடந்த போதும், அந்த போர்க்குரல் என்றென்றும் நெஞ்சை விட்டு அகலாத ஒன்றாகும்.
தோழர்களின் தோழனாக வாழ்ந்து மறைந்த அந்த மாமனிதருக்கு வீர வணக்கங்களை கம்பீரமாக செலுத்துவோம்.
Comments
Post a Comment