கம்யூனிஸ்ட் அறிக்கை அறிமுகம்

 

பதிவு - 14

இன்னும் பதினைந்து வயது முடியவில்லை. 1964ல் வேலூர் ஊரீஸ் கல்லூரியில் பி.யூ.சியில் சேர்ந்தாச்சு. நேரு மறைந்துவிட்டார். லால்பகதூர் பிரதமர். கல்லூரி தொடங்கிய சில மாதங்களிலேயே ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் துவங்கிவிட்டது. இந்தி திணிப்பை எதிர்ப்பது என்கிற முடிவில் போராட்டத்தில் வேகமாக இறங்கி விட்டேன். ஆனாலும் போராட்டத்தின் போக்கிலும், அரசியலிலும் எனக்கு குழப்பம் இருந்தது. 

நண்பர்களோடு மொழியைப் பற்றி பேசும்போது அரசியலும் பேச வேண்டியிருந்தது. அடிப்படையாக பேச வேண்டியதை தெளிவாக பேச அது வரை தெரிந்தவை போதவில்லை. 

அப்பாவிடம் எத்தனையோ கேள்விகளை கேட்டிருக்கிறேன். கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் எளிமையாக பதில் கூறுவார். 

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு தருவதால் (DA - பஞ்சப்படியைத்தான் தினத்தந்தி அப்படி கூறுகிறது)  விலை உயர்ந்து விடுமாமே? இது என் கேள்வி. 

ஏற்கனவே விலை உயர்ந்ததனால் வாங்க முடியாமல் போன பொருள்களை வாங்கிக் கொள்ள தரப்படும் பஞ்சப்படியால் எப்படி விலை ஏறும்? கேள்வியாக அப்பாவின் பதில்.

என் பள்ளி, கல்லூரி நண்பர்களிடம் பரவியிருந்த கம்யூனிச எதிர்ப்பாளர் மெக்கார்த்தியின் கருத்துக்கள் காரணமாக எழுந்த இன்னொரு கேள்வி, "கம்யூனிஸ்டுகள் சங்கம் வைத்திருக்கும் தொழில் உருப்படாதாமே?"

"இது உரிமைகளை தர மறுப்பவர்களின் அவதூறு பிரச்சாரம்"

இப்படி பல கேள்விகளுக்கு உடனடியாக பதில் தரும் அப்பா கல்லூரியில் நடைபெறும் மொழி போராட்டம் பற்றி கேட்ட போது, "இப்போது நீ கல்லூரி மாணவன். நீயாகவே பதிலை தேடு. படி. நான் உதவி செய்கிறேன்‌‌" என்று கூறிவிட்டார்.

ஆறாவது, ஏழாவது, எட்டாவது படிக்கும்போது சோவியத் லேண்ட் பத்திரிகை வீட்டுக்கு வரும். அப்பாவின் ஏற்பாடு. சோவியத்தின் விண் வெளி பயணம், ஸ்புட்னிக், யூரி காரின், வாலண்டினா  தெரெஷ்கோவா, உஸ்பெக்கிஸ்தானின் வாளிப்பான இளைஞர்கள், யுவதிகள் ஆகியோர் அறிமுகம் ஆனார்கள். பள்ளியில் ஸ்குவாடுக்கு காகரின் பெயரை சூட்டுமாறு ஆசிரியரிடம்  வெற்றிகரமாக பேசினேன். இசை பாடும் யுவதியும், பின்னணியில் குழல் ஊதும் இளைஞனும் வழ வழா தாளில் வெளியான பெரிய அளவிலான  புகைப் படத்தை சேகரித்து பத்து வருடங்களுக்கு மேலாக பத்திரமாக வைத்திருந்தேன்.

1962ல் ஒன்பதாவது படிக்கும்போது கம்யூனிஸ்ட் பத்திரிகை ஜனசக்தி அறிமுகம். "வாங்க தம்பி. நீங்க நல்லா தமிழ் பிடிப்பீங்களாமே. அப்பா சொன்னாரு. எங்கே ஜனசக்தியை தோழர்களுக்கு எல்லாம் படிச்சு காட்டுங்க பார்ப்போம்" வேலப்பாடியில் நாங்கள் குடியிருந்த வீட்டிலிருந்து மூன்றாவது வீட்டு திண்ணையில், ரேழியில், வெராண்டாவில் அமர்ந்து பீடி சுற்றிக் கொண்டிருந்த பத்து பதினைந்து தோழர்களில் ஒருவர் கேட்டார். அப்போதிலிருந்து மாலை வேளைகளில் பீடித் தொழிலாளர்களுக்காக ஜனசக்தி படிப்பேன்.

நான் ஜனசக்தி படிப்பதை பார்த்திருந்த ஒரு தோழர் அப்போது நடை பெறவிருந்த சட்டசபை, பாராளுமன்ற தேர்தலுக்கு ஓட்டு கேட்க சில சிறுவர்களை திரட்டி என்னையும் அவர்களோடு போய் வரச் சொன்னார். எலி மருந்து விற்பவர் உபயோகிக்கும் தகர மெகா ஃபோனையும் கையில் தந்தார். சட்ட மன்ற அபேட்சகர் கே.ஆர்.சுந்தரதத்துக்கும் பாராளு மன்ற அபேட்சகர் ராஜரத்தினம் எம்.ஏ. பி.எல்லுக்கும்  கதிர் அரிவாள் சின்னத்தில் ஓட்டும் கேட்டிருக்கிறேன்.

என்னை நான் கம்யூனிஸ்ட் என்று நம்பினேன். ஆனால் கம்யூனிச கருத்துக்களை கோர்வையாக முன் வைக்க இயலவில்லை. 

எளிமையான புத்தகம் எது என்பதை எப்படி தேடுவது, எங்கு தேடுவது?  அப்பாவிடம் இருந்த புத்தகங்களில் பாதிக்கு மேல் சோவியத் வெளியீடு. பல முறை முயன்றும் ஊன்றி படிக்க சிரமமாக இருந்தது. மீண்டும் அப்பாவிடம் கேட்பதற்கு முன் ஏதாவது ஒரு புத்தகமாவது படிக்க வேண்டும் என நினைத்தேன்.

கல்லூரி நூலகத்தில் அலமாரிகளில் கம்யூனிசம் பற்றிய எளிமையான நூலை தேடினேன். டாக்டர் மு வரதராசனார் எழுதிய 'கி.பி.2000' என்ற நூல் கிடைத்தது. வேகமாக படிக்கக் கூடிய வகையில் எளிமையாக இருந்து. ஓரிரு நாட்களில் படித்து முடித்து விட்டேன். இதை கவனித்துக் கொண்டிந்த அப்பா,  கார்ல் மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் எழுதிய 'கம்யூனிஸ்ட் அறிக்கை' என்ற நூலை என்னிடம் கொடுத்தார். நான் அந்த நூலை ஏற்கனவே அப்பாவின் புத்தக அலமாரியில் பார்த்திருக்கிறேன். ஆனால் படிக்க சிரமமாக இருந்ததால் படிக்காமலே காலம் தாழ்த்தினேன். இதனை கவனித்த அப்பா கம்யூனிஸ்ட் அறிக்கை அறிமுகம் என்ற நூலில் உடோப்பியன் சோசலிசம் என்ற பகுதியை படிக்கச் சொன்னார். அது மு.வரதராசனாரின் கி.பி. 2000 போன்றே இருந்தது. அவையெல்லாம் நல்ல எண்ணங்களின் வெளிப்பாடுகள் மட்டுமே. ஆனால் தெளிவான நடைமுறையினை கூறுவது கார்ல் மார்கஸ் ஏங்கெல்ஸின் கம்யூனிஸ்ட் அறிக்கை என்பதை விளக்கி, அதில் கார்ல் மார்க்ஸ் தன்னுடைய முன்னோடிகள் பார்க்க வாய்ப்பில்லாத ஆனால் தான் கவனித்த காரணிகளை எப்படி விளக்கியிருக்கிறார் என்பதை விளக்கி கூறினார். 

எனக்கு அன்று இரவு தூக்கம் வரவில்லை.

Comments

Popular posts from this blog

My periappa and periamma

GDS ஊழியரை Group E ஊழியராக்குக

மார்க்சியம் வெற்றி பெற மூன்று தளங்களில் போராட்டம்