கம்யூனிஸ்ட் அறிக்கை
தோழர் சி.எஸ்.பஞ்சாபகேசன் நூற்றாண்டு.
பதிவு 15
1970களில் அப்பா நிறைய வகுப்புகள் எடுப்பார்.
1. கம்யூனிஸ்ட் அறிக்கை
2. பரிணாம வளர்ச்சி
3. இயக்கவியல் பொருள்முதல் வாதம்
4. வரலாற்றியல் பொருள் முதல் வாதம்.
5. சுதந்திர போராட்டத்தில் தொழிலாளர் பங்கு
6. இந்திய தொழிற்சங்க வரலாறு
ஆகிய வகுப்புகள் பல முறை நடத்தியிருக்கிறார்.
வரையறைகளை எளிமையாக சொல்லுவார். விஞ்ஞான சோசலிசம் என்றால் என்ன?
எல்லோருக்கும் என்ன தேவை?
எப்படி உற்பத்தி செய்வது?
எப்படி விநியோகிப்பது?
உற்பத்தியிலும், விநியோகத்திலும் எப்படி எல்லோரையும் வேலைக்கு அமர்த்துவது?
இதுதான் விஞ்ஞான சோசலிசம் என்று கூறி வகுப்பை தொடங்குவார்.
இதற்கென ஓரிரு நாட்கள் வள்ளி மலை, காட்பாடி டவுன்ஷிப் போன்ற இடங்களில் உள்ள திருமண மண்டபங்களில் முகாம்கள் நடந்துள்ளன. பல துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் அவற்றில் கலந்து கொண்டுள்ளனர். இதே போன்று தமிழ்நாட்டின் பல ஊர்களில் வகுப்பு நடத்தியிருக்கிறார்.
ஒவ்வொருமுறை வகுப்பெடுக்கும் போதும் தன்னுடைய குறிப்புகளில் நடப்பு தகவல்களை சேர்த்து புதுப்பித்துக் கொள்வார்.
ஒவ்வொரு தலைப்பிலும் பல குறிப்பு தொகுப்புகள் சேமித்து வைக்கப்பட்டு இருந்த பெட்டி ஒன்று உழைக்கும் வர்க்க அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தது. தோழர்கள் சிவகுருவும், கமலாலயனும் அவற்றை ஒழுங்குபடுத்தி பத்திரப்படுத்தி உள்ளனர்.
கம்யூனிஸ்ட் அறிக்கை பற்றிய அவருடைய கையெழுத்து பிரதியின்
முதல் பக்க படம் கீழே இடப்பட்டுள்ளது. முழு குறிப்பு cspanchapakesan.blogspot.com என்ற வலைப் பக்கத்தில் பதிவிடப் பட்டுள்ளது. இணைப்பு கமென்ட் பிரிவில் இடப் பட்டுள்ளது.
Comrade C S Panchpakesan அவர்களின் குறிப்பு
Communist Manifesto
கம்யூனிஸ்ட் அறிக்கை (சுருக்கம்)
தோழர்கள் கார்ல் மார்க்சும், ஏங்கல்சும் கம்யூனிஸ்ட் லீகின் கட்டளைப்படி 1848ம் வருடம் இதை எழுதி முடித்தனர்.
1) முதலாளித்துவ வர்க்கமும் பாட்டாளி வர்க்கமும் (Bourgeoise and Prolitarions)
சமுதாயத்தில் சரித்திரம் ஆரம்ப கால முதல் இன்று வரை வர்க்கப் போராட்டங்களின் சரித்திரமாகவே இருந்திருக்கிறது.
வர்க்கங்களின் வளர்ச்சி இன்றைய முதலாளித்துவ சமுதாயத்தில் முதலாளி வர்க்கத்தையும் பாட்டாளி வர்க்கத்தையும் தோற்றுவித்து இருக்கிறது.
முதலாளி வர்க்கத்தின் வளர்ச்சி, மூலதனம் ஓரிடத்தில் குவிக்கப்பட்டு பெரும் தொழிற்சாலைகள் தங்கு தடையின்றி மக்களை சுரண்டுவதற்கான வசதி கிடைப்பதால் ஏற்படுகின்றது. முதலாளித்துவம் தான் வளரும்போதே தன் வர்க்க விரோதியாகிய பாட்டாளி வர்க்கத்தை தானே தோற்றுவிக்கிறது. இது எப்படி ஏற்படுகிறது? முதலாளித்துவம் கட்டுகிற தொழிற்சாலைகளிலே முன்பின் தெரியாத, மூலைக்கு மூலை நாட்டுப்புறங்களில் வசித்த மக்கள் ஓரிடத்தில் குவிக்கப்படுகின்றனர். முதலாளித்துவ வளர்ச்சிக்கு இன்றியமையாத சரித்திர கட்டத்தில் விவசாயிகளும் சிறு கைத்தொழிலாளிகளும் தாங்கள் வாழ்வதற்கு தங்கள் உழைப்பைத் தவிர வேறு ஏதும் இல்லாத நிலைமையிலே வந்து சேரும் தொழிலாளர்கள்தான் இவர்கள்.
முதலாளித்துவம் தன் வளர்ச்சியோடு அதற்கு முன்பிருந்த நிலப் பிரபுத்துவ சமுதாயம் கட்டி அமைத்த சமுதாய உறவுகள் மனப்பான்மைகள், நாகரிகம் முதலிய அனைத்தையும் அடியோடழித்து அவற்றிற்கு பதிலாக புதிய உறவுகள் நாகரிக மனப்பான்மை முதலியவற்றை உண்டாக்குகிறது.
முதலாளித்துவம் தன் வளர்ச்சியிலே பெரிய ஆலைகளின் மூலம் குறைந்த உற்பத்தி செலவில் வாழ்க்கைக்கு வசதியளிக்கும் பொருளை உற்பத்தி செய்து மலிவான விலையில் கொடுப்பதானது அதை உலகம் எங்கனும் ஊடுருவிப் பரவி செல்ல உதவுகிறது, தான் உற்பத்தி செய்யும் சாதனங்களை எங்காவது கொண்டு போய் விற்றாக வேண்டும் என்ற நிலைமை முதலாளித்துவத்தை உலகம் எங்கிலும் சந்தையைத் தேடி ஓடச் செய்கிறது,
முதலாளித்துவம் நவீன போக்குவரத்துச் சாதனங்களை கட்டி அமைப்பதானது உலகத்தின் மூலைக்கு மூலை உள்ள மக்களோடு தொடர்பு கொண்டு அவர்களை நாகரிகமடையச் செய்கிறது; அதன் வளர்ச்சிமற்ற மக்கள் சமுதாயங்களும் முதலாளித்துவ சமுதாயங்களாக மாறினால் அன்றி வாழ இயலாது என்ற நிலைமையை ஏற்படுத்துகிறது.
முதலாளித்துவம் அடிக்கடி நவீனமான உற்பத்திக் கருவிகளை கண்டு பிடித்து நாளுக்கு நாள் புதிய புதிய உற்பத்தி முறைகளைக் கொண்டு வருகிறது. நகரங்களை வெகு வேகமாக வளர்ச்சியடையச் செய்து கிராமங்களை நாசப்படுத்துகிறது.
முதலாளித்துவம் பொருள் உற்பத்திச் சாதனங்களையும், உற்பத்தி உறவுகளையும் பெரியஅளவு வளர்த்து விடுகிறது. கடைசியில் அவை அதனுடைய கட்டுக்கு மீறி வளர்ந்து விடுகிறபோது என்ன செய்வது என்று திண்டாடுகிறது.
உற்பத்திச் சாதனங்கள் ஏராளமாக உற்பத்திச் செய்து விடுகின்றன. உற்பத்திப் பண்டங்களை எங்கு கொண்டு போய் திணிப்பது என்று தெரியாமல் முதலாளித்துவம் தவிக்கிறது. அமித உற்பத்தியால் ஏற்படும் பொருளாதார நெருக்கடிகள் முதலாளித்துவ சமுதாயத்தை திக்கு முக்காடச் செய்கின்றன. ஏனென்றால் அமித உற்பத்தி பண்டங்களை மலிவடையச் செய்கின்றது; முதலாளித்துவத்திற்கு லாபம் கிடைக்க ஒட்டாமல் செய்கின்றது.
இந்த சமயத்தில் வளர்ந்து வரும் பாட்டாளி வர்க்கம் முதலாளித்துவத்தை நெருக்குகின்றது. முதலில் போட்டியின் காரணமாக தனித்தனி நலன்கள் உடையதாய் ஒற்றுமையற்றதாய் முளைத்த இந்த வர்க்கம் இப்பொழுது முதலாளியை எதிர்த்துத் தங்கள் நலனைப் பாதுகாத்துக் கொள்வதற்காக சங்கங்களில் திரண்டு வர்க்க உணர்வும், போர்க்குணமும் பெற்று வளர்ந்து வந்திருக்கிறது.
தொழிலாளி வர்க்கம் முதலாளித்துவ வர்க்கத்திற்கும் அதன் அரசாங்கத்திற்கும் அடிமைப்படுத்தப் பட்டிருக்கிறது. நாளுக்கு நாள் முதலாளித்துவ வர்க்கத்தால் அதிகமாக சுரண்டப்பட்டு அதிகமாக அடிமைப்படுத்தப் பட்டு வருகிறது. லாபத்தை லட்சியமாகக் கொண்ட முதலாளித்துவ வர்க்கத்தின் கேவலமான சுரண்டலை எதிர்த்து தொழிலாளி வர்க்கம் போர்க் கொடியை உயர்த்துகிறது.
வர்க்கப் போராட்டம் அரசியல் பண்பை அடைகிறபோது அது தேசியத் தன்மை அடைகிறது.
முதலாளித்துவ வர்க்கம் நாளுக்கு நாள் பலகீனம் அடைந்து வருகிறது. அதற்குள் ஏற்படும் உட்போட்டியால் க்குப் பிடிக்க முடியாத ஒரு பகுதி அதனிடமிருந்து பிரிகிறது. முதலாளித்துவ வர்க்கத்தின் வளர்ச்சியால் நாளுக்கு நாள் அடித்து நொறுக்கித் தள்ளப்படும் மத்திய வர்க்கம் அதை எதிர்க்கும் நிர்பந்தத்திற்கு ஆளாகிறது. ஆனால் இவற்றில் எதுவுமே புரட்சிகரமான வர்க்கம் அல்ல. இவர்கள் தங்கள் வர்க்க அந்தஸ்தை காப்பாற்றிக் கொள்வதற்காகவே முதலாளித்துவ வர்க்கத்தை எதிர்க்க வேண்டியவர்களாகிறார்கள். இந்நிலையில் வாழ்க்கையின் அடி மட்டத்தில் இருக்கும் தொழிலாளி வர்க்கம் தங்களுடைய உழைப்பை சுரண்டி சொந்தமாக மாற்றி மேலும் மேலும் வளர்ந்துகொண்டு இருக்கும் வர்க்கத்தை வீழ்த்துவதால் அல்லாமல் தங்களுக்கு என்று பாதுக்காக்க எந்த வித சொத்தும் இல்லாத அந்த வர்க்கம் சொத்துரிமைக்கு இருக்கும் சகல பாதுகாப்புகளையும் அழித்து தகர்த்தெறிந்துவிட்டுஅதனை நாட்டின் உடைமையாக ஆக்காமல் தான் மீள முடியாது என்ற நிலைமைக்கு வருகிறது.
முதலாளித்துவ வர்க்கம் பாட்டாளி வர்க்கத்திற்கு குறைந்த பட்ச வாழும் உரிமையை கூட அளிக்கவில்லை. அதனால் தான் வாழ்வதற்காகவே அவ்வர்க்கத்தையழித்து புதிய சரியான நிலைமைகளை ஏற்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் பாட்டாளி வர்க்கத்திற்கு உண்டாகிறது. இதற்கு முன் சரித்திரத்தில் நடந்த இயக்கங்கள் எல்லாம் சிறுபான்மையினருக்காக நிலபிரபுக்களுக்காக முதலாளிகளுக்காக நடந்த இயக்கங்களாக இருந்தன. பாட்டாளி வர்க்கத்தின் இந்த இயக்கமோ சமுதாயத்தின் மிகப் பெரும்பான்மையோருக்காக நடத்தும் இயக்கமாக இருக்கின்றது.
முதலாளித்துவ வர்க்கம் மேற்கொண்டு நீடித்து இருக்க முடியாத நிலைமையை அடைகின்றது. அது உயிர் வாழ வேண்டுமென்றால் மூலதனம் உருவாகிக் கொண்டே இருக்க வேண்டும். அதற்கும் கூலி உழைப்பு தங்கு தடையின்றி கிடைக்க வேண்டும். ஆனால் தொழிலாளி வர்க்கம் முதலாளித்துவ வர்க்கத்தின் வளர்ச்சியாலேயே தடுக்க முடியாதபடி ஒன்று சேர்க்கப்பட்டு புரட்சிகரமான வளர்ச்சி அடைகிறது. அதனால் அவர்களுக்கிடையே போட்டி மறைந்து விடுகிறது. அதனால் மேற்கொண்டு முதலாளித்துவம் வளரமுடியாத நிலைமைக்கு வந்து விடுகிறது.
முதலாளித்துவம் தன் வளர்ச்சியால் தனக்கு குழி பறிப்பவர்களையே வளரச்செய்கிறது. எனவே அதன் வீழ்ச்சி தடுக்க முடியாதது. தொழிலாளி வர்க்கத்தின் வெற்றி தடுக்கப்படவே முடியாதது.
2) பாட்டாளி வர்க்கமும் கம்யூனிஸ்டுகளும்.
பாட்டாளி வர்க்கத்தின் வர்க்க முக்கியத்துவத்தையும் சமுதாயத்தில் அதன் நிலைமையையும் அதன் வளர்ச்சி கட்டங்களையும் விஞ்ஞான பூர்வமாக உணர்ந்து அதன் போராட்டங்களில் மிகவும் முன்னேறிய பகுதியினராக அதனுடன் இரண்டற கலந்து நிற்பவர்களும்தாம் கம்யூனிஸ்டுகள். தொழிலாளி வர்க்க நலன்களைத் தவிர கம்யூனிஸ்டுகளுக்கு வேறு வித வர்க்கநலன்கள் எதுவும் கிடையா. ஆயினும் தொழிலாளி வர்க்கத்தின் கட்சிகளுக்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் இரு முக்கியமான வேறுபாடு உண்டு.
1. கம்யூனிஸ்டுகள் பற்பல் நாடுகளில் தொழிலாளர்கள் தேசிய போராட்டங்களை நடத்துகிற போதிலும் உலகத் தொழிலாளி வர்க்கம் முழுமைக்கும் (ஒரு வர்க்கம் என்ற ரீதியில்) பொதுவாக உள்ள நலன்களை சுட்டிக்காட்டி அவற்றை முன்னணிக்கு கொண்டு வருகின்றனர்.
2. முதலாளித்துவத்தை எதிர்த்து நடத்துகிற போராட்டங்களின் ஒவ்வொரு கட்டங்களிலும் வர்க்க இயக்கம் முழுமைக்கும் பொருந்துகிற நலன்களை பிரதிபலிக்கின்றனர்.
சிதறிக் கிடக்கும் தொழிலாளிகளை ஒன்று சேர்ப்பதும் வர்க்க ரீதியில் ஒரு பேரணியில் திரளச் செய்வதும் முதலாளித்துவ வர்க்கத்தை தூக்கி எறிய அதைத் தயார் படுத்துவதும் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றி முன்னேற வழிகோலுவதும் கம்யூனிஸ்டுகள் கடமையாகும். இவை கம்யூனிஸ்டுகளின் கற்பனா தத்துவங்கள் அல்ல. சர்த்திரத்தின் வளர்ச்சியேயாகும். இதனை உணர்ந்து கொண்டால் அவ்வளர்ச்சிக்கு உதவுபவர்களே கம்யூனிஸ்டுகள்.
சொத்துக்களை அழிப்பவர்களா கம்யூனிஸ்டுகள்?
அல்ல! முதலாளித்துவ தனி உடைமையை உடைத்து தகர்க்க வேண்டும் என்பவர்களே கம்யூனிஸ்டுகள். ஏன்?
முதலாளிதுவ தனி உடைமை சமுதாயம் முழுவதையுமே சுரண்டி மக்கள் அனைவரையும் பறிமுதல் செய்தே வளர்ச்சி அடைந்து வந்திருக்கிறது. அதை பறிமுதல் செய்தும், மக்கள் அனைவருக்கும் அதை பொது உடைமையாக்கி வாழ வழி செய்து கொடுப்பதும் நியாயம் மாத்திரம் அல்ல. கடமையும் கூட. "தனி உடைமை ஒழிப்பு" என்பதுதான் கம்யூனிஸ்டுகள் தத்துவம்.
தனி உடைமை என்பதால் எதை குறிக்கிறோம்? சிறு கைத் தொழில்களையும், விவசாயிகளின் சொத்துக்களையும் அல்ல. அவற்றை முதலாளித்துவம்தான் அழித்துக் கொண்டு வருகிறது. அவற்றை கம்யூனிஸ்டுகள் அழிக்க விரும்பவில்லை. நவீன முதலாளித்துவத்தின் தனி உடைமையைச் சொந்த முயற்சியால் சம்பாதித்தது என்று சொல்லமுடியாது. ஏனென்றால் கூலி உழைப்பால் தொழிலாளிகள் எவ்விதமான சொத்தும் சேர்த்துக் கொள்ள முடியவில்லை. அது மூலதனத்தைத்தான் திரட்டி முதலாளியின் கையிலே கொடுத்தது. அந்த மூலதனம் தானே இயங்கிப் பொருள் உற்பத்திச் செய்யக் கூடியதல்ல. சமூகம் முழுவதுமே சேர்ந்துதான் அதை இயக்கிப் பொருள் உற்பத்தி செய்யமுடியும். அப்படி இருக்கையில் மூலதனத்தை ஒரு தனி மனிதனின் சக்தியால் உண்டாக்கியது என்று சொல்வது எப்படி பொருந்தும்? அது ஒரு சமூகத்தின் சொத்து. ஏனென்றால் அது சமூக சக்தியால் உருவாக்கப் பட்டது. அதை சமூகத்துக்கு சொந்தமாக்குவது என்றால் அழித்துவிடுவது என்று அர்த்தமல்ல. அது குறிப்பிட்ட சிலர் கைகளில் அகப்பட்டு வர்க்கத் தன்மை பெறுவதை மட்டுமே ஒழிப்பது ஆகும்.
கூலி உழைப்புக்கு பிரதி பலனாக தொழிலாளி வர்க்கத்துக்குக் கிடைப்பது என்ன?
உயிரோடு வாழ எந்த அளவு தேவைப் பொருட்கள் வேண்டுமோ அந்த அளவு தேவைப் பொருட்களின் விலைதான். தன் உழைப்பின் மூலம் உண்டாக்குகிற செல்வத்தில் உடலோடு உயிரை வைத்துக் கொண்டிருக்கப் போதுமான அளவு பங்கையே அவன் பெருகிறான். மற்றபடி மூலதனத்தைப் பெருக்குவதற்காகத்தான் அவன் உயிரோடு இருக்கிறான். அதுவும் மூலதனத்திற்கு தேவைப்படுகிறவரைதான் அவன் வாழவிடப்படுகிறான். இந்த கேவலத் தன்மையை ஒழித்து உயிருள்ள உழைப்பு மூலதனத்தைப் பெருக்குவதற்காக உபயோகப் படுத்தப் படாமல் மூலதனம் உயிருள்ள உழைப்பின் வாழ்வை வளமாக்கவும் செழுமைப்படுத்தவும் உபயோகப்படுத்தப் படவேண்டும்.
முதலாளித்துவ சமுதாயத்தில் மூலதனம் எல்லா சுதந்திரங்களும் உடையதாக இருக்கையில் பல்லாயிரக் கணக்கான தனி மனிதர்கள் எந்த விதமான உரிமையும் இல்லாத அடிமைகளாய் இருக்கிறார்கள். முதலாளித்துவத்தின் தனி உடைமையை தனி சுதந்திரத்தை ஒழிப்பதுதான் "தனி நபர் சுதந்திரத்தை" ஒழித்து விடுவதாக முதலாளித்துவம் கூச்சல் போடுகிறது. ஆம். அதை ஒழித்தே ஆக வேண்டும்.
சமூகத்தில் உழைப்பினால் கிடைக்கிற பலன்களை எடுத்துக் கொள்வதை எந்த தனி மனிதனிடமிருந்தும் பறித்துவிட கம்யூனிஸ்டுகள் விரும்பவில்லை. மற்றவர்களின் உழைப்பைப் பறித்துக் கொள்ளச் சிலரிடம் இருக்கும் சக்தியை பறித்துவிடுவதே கம்யூனிஸ்டுகளின் நோக்கம்.
இந்த முதலாளித்துவ சமுதாய அமைப்பை அடிப்படையாகக் கொண்டு உண்டாயிருக்கிற சுதந்திரம், கலை, சட்டம் முதலிய எல்லாவற்றிற்கும் மாற்றாக மக்கள் எல்லோர் வாழ்வையும் தழுவிகிற புதிய சுதந்திரம், கலை, சட்டம் முதலியவற்றை உண்டாக்குவதே கம்யூனிஸ்டுகளின் நோக்கம்.
கம்யூனிஸ்டுகள் குடும்ப அமைப்பை ஒழித்துவிடுவார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் ஏற்கனவே முதலாளித்துவம் சமுதாயத்தின் பெரும்பகுதிக்கு குடும்பம் என்பதே இல்லாமல் போகும்படி செய்துவிட்டது. முதலாளித்துவ குடும்ப உறவமைப்பு கம்யூனிஸத்தின் கீழ் அழிந்து போகலாம். ஆனால் அதை விட வளமையான இன்பம் நிறைந்த குடும்ப அமைப்புக்கு அடிப்படையாக சிறந்த பொருளாதார அமைப்பை கம்யூனிஸம் அளிக்கிறது. பெற்றோர்கள் குழந்தைகளை சுரண்டுவதைத் தடுக்கிறது. குழந்தைகளுக்கு முதலாளித்துவத்தின் சொருகு கண்ணிகளாகும் அடிமை கல்விக்குப் பதிலாக சமூகக் கல்வி முறையைத் தருகிறது.
கம்யூனிஸ்டுகள் பெண்களைப் பொது உடைமையாக்கி விடுவார்கள் என்று கூச்சல் போடுகிறது முதலாளித்துவம். முதலாளித்துவம் பெண்களை ஆடு மாடு போல் ஆண்களின் சொத்தாக இருக்கும் நிலையில் வைத்துவிடுகிறது. பெரிய அளவு விபசாரத்தை வளர விட்டு சமுதாயம் முழுவதுமே அழுகி நாசமாகப் போகச் செய்து கொண்டிருக்கிறது. எல்லாவற்றிற்கும் இன்றைய பொருள் உற்பத்தி முறையே காரணம். இது ஒழியும்போது பெண்கள் சொத்தாகக் கருதப்படும் நிலையும் விபசாரமும் ஒழிந்து போகும். அவர்கள் சரிசமமான வாழ்வு பெறுவார்கள். பெண்களை சொத்தாக கருதுவது என்ற பேச்சுக்கே இடமில்லாதபோது அவர்களை உடமையாகக் கருதும் மனப்பான்மையும் ஒழிந்தே போகும்.
கம்யூனிஸ்டுகள் தேசங்களையும் தேசிய இனங்களையும் அழித்துவிடுவார்கள் என்று கூறப்படுகிறது. அவர்களுடைய தேசிய மனப்பான்மைகளை ஆரம்பத்திலேயே முதலாளித்துவம் அழித்து விட்டது. முதலாளித்துவத்தின் வளர்ச்சியில் பொருள் உற்பத்தி முறைகள் ஒரே மாதிரி அதாவது மக்களின் வாழ்க்கை நிலைமைகளை ஒரே மாதிரி ஆக்குவதால் தேசிய மாறுபாடுகளை மறைந்து போகச் செய்து விட்டது.
தொழிலாளி மக்கள் அரசியல் ஆதிக்கம் பெரும்போது கொஞ்சம் நஞ்சமிருக்கும் வித்தியாசமும் அடியோடு மறைந்து போகும்! மனிதனை மனிதன் சுரண்டுகிற பழக்கமும் மறையும்போது நாட்டை நாடு சுரண்டும் பழக்கமும் மறைந்துபோகும். குறைந்த பட்சம் நாகரிக நாடுகளின் பாட்டாளிகள் ஒன்று சேர்வதானது அவர்களது விடுதலையைத் துரிதப்படுத்தும். மதத்தை அடிப்படையாகக் கொண்டு கம்யூனிஸத்தை எதிர்ப்பவர் உளர். ஆனால் உற்பத்தி முறையில் ஏற்படும் மாறுதல் மனித சிந்தனையை எவ்வளவு வேகத்தில் மாற்றி விடுகிறது என்பதை கவனிக்க வேண்டும். மதம் ஒவ்வொரு காலத்திலும் திருத்தி அமைக்கப்பட்டுக் கொண்டே வந்திருக்கிறது என்பதையும் கவனிக்க வேண்டும். அதிலும் கடந்த காலங்களில் சமுதாயம் வெவ்வேறு வளர்ச்சியை அடைந்து வந்திருப்பினும் சுரண்டுபவனும் உள்ள சமுதாயமாகவேஇருந்திருக்கிறது என்பதும் அதனால் மத உணர்வு ஒழுக்க நெறிகள் முதலியவை சுரண்டல் அமைப்புக்கு ஆதரவானமையாகவே இருந்து வந்திருக்கின்றன என்பதும் மறக்க முடியாதவை.
வர்க்க முரண்பாடுகளை மறைந்து போகச் செய்யும் புரட்சியானது எண்ணங்களிலும் புரட்சிகரமான மாறுதல்களை உண்டாக்கியே தீரும்.
அடுத்தபடியாக ஆட்சி புரிகிற வர்க்கமாக மாறியதும் பாட்டாளி வர்க்கம் என்ன செய்யும் என்று கவனிப்போம்.
வெற்றி பெறும் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகள் நாட்டுக்கு நாடு வேறுபடுமாயினும் முன்னேற்றமடைந்துள்ள நாடுகளில் கீழ் கண்டபடியாக இருக்கும்.
1. நிலத்தை பொதுவுடைமையாக்கி நில வருமானத்தை பொது காரியங்களுக்கு பயன்படுத்துதல்.
2. வருமானம் அதிகரிக்க வரியும் அதிகரிக்கும் முறையில் வரி விதித்தல்.
3. வாரிசு பாத்யதைகளை ஒழித்தல்.
4. புதிய அரசாங்கத்தை எதிர்ப்பவர்கள் நாட்டை விட்டு ஓடுபவர்கள் சொத்துக்களை பறிமுதல் செய்தல்.
5. தேசிய பாங்கு ஏற்படுத்தி பண வரவு செலவுகளை அரசாங்கத்தின் கைக்கு கொண்டு வருதல்.
6. போக்கு வரத்து செய்தி சாதனங்களை அரசாங்க உடைமை ஆக்கல்.
7. அரசாங்க தொழிற்சாலைகள் வளர்த்தல். திட்டமிட்டபடி பொது நலத்தை வளமாக்கல்.
8. உழைப்பை மக்கள் எல்லோருக்கும் கடைமையாக்குதல். விவசாயத்திற்கு இயந்திர வசதியளித்தல்.
9; விவசாயத்தையும் இயந்திர தொழிலையும் இணைத்து கிராமத்திற்கும் நகரத்திற்கும் உள்ள வித்தியாசத்தை அகற்ற மக்கள் பரவலாக வாழும்படி செய்தல்.
10. பொதுப் பள்ளிக் கூடங்களில் எல்லா குழந்தைகளுக்கும் இலவசமாக கல்வி கற்பிப்பதும், குழந்தை வேலையை தடை செய்வதும், இயந்திர பொருள் உற்பத்தியுடன் கல்வியை இணைப்பதும் ஆகும்.
இந்த அடிப்படையில் வர்க்க முரண்பாடுகள் பரிபூரணமாக மறைந்து ஒரு பொதுவான மக்கள் சங்கமாக நாடு வளர்ச்சியடைய செய்வதுதான் கம்யூனிசத்தின் லட்சியமாகும்.
(3) ( சோசலிஸ கம்யூனிஸ்ட் இலக்கியம்
1. பிற்போக்கு சோசலிஸம்
(1) நிலப் பிரபுத்துவ சோசலிஸம்
முதலாளித்துவத்தால் வீழ்த்தப்பட்ட நிலபிரபுக்கள் வேறு எவ்வகையிலும் தங்கள் வயிற்று எரிச்சலை காட்டமுடியாமல் சில சமயங்களில் சோசலிஸம் பேசக் கிளமபுகிறார்கள். அடிப்படையில் இவர்கள் கருத்து என்னவென்று பார்த்தால் முதலாளித்துவம் புரட்சிகரமான தொழிலாளி வர்க்கத்தை கண்டிப்பதும், அது தொழிலாளி வர்க்கத்தை மேலும் மேலும் அடக்கி வைக்க உதவுவதும்தான். மத சோசலிஸமும் நிலப்பிரபுத்துவத்தைப் போன்றதே.
(2) முதலாளித்துவ வர்க்கத்தின் தோற்றத்தில் தொழிலாளி வர்க்கத்திற்கும் முதலாளி வர்க்கத்திற்கும் இடையில் ஒரு ஊசலாடும் வர்க்கம் தோன்றுகிறது. இது நாளுக்கு நாள் தொழிலாளி வர்க்கத்தை நோக்கித் தள்ளப்பட்டுக் கொண்டேயிருப்பதால் தன் நிலையைக் காத்துக் கொள்ள போராடிக் கொண்டேயிருக்கிறது. இந்த வர்க்கத்திலிருந்து சோசலிஸ்டுகள் சில அடிப்படை உண்மைகளை உள்ளவாறு உணர்ந்த போதிலும் இவர்களுடைய இறுதி லட்சியம் பழைய பொருளுற்பத்தி சாதனங்களை நிலை நாட்டுவதும் தந்தை வழி விவசாயம் செய்து தங்களுக்குள் பங்கிட்டுக் கொள்வது போன்ற முறைகளை கையாள்வதுமாக இருப்பதால் வளர்ச்சிக்கு ஒவ்வாததாகவும் பிற்போக்குத் தனமானதாகவும் இருக்கிறது.
(3) ஜெர்மனிய (original) சோசலிஸம்.
பிரெஞ்சு சோசலிஸ இலக்கியத்தை பிரெஞ்சு சரித்திர வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு பார்க்காமல் அதை அப்படியே தங்களுக்கேற்ப தரித்துக் கொண்டார்கள். ஜெர்மனிய (மத்திய) வர்க்கத்தினர் இவர்களுடைய சோசலிஸம் நடைமுறையில் பூர்ஷ்வா வர்க்கத்தை பயன் படுத்தவும், புரோலிட்டேரியட் வர்க்கம் வளர்ச்சி அடையாமல் செய்யவும் பயன்படுத்தப்பட்டது. சரியாக வர்க்க பேதத்தை கவனியாமலும் மத்தியதர வர்க்க மனிதனையே அடிப்படையாகக் கொண்டு கூறப்பட்ட இந்த சோசலிஸம் அடிப்படை கம்யூனிஸ தத்துவங்களை பழிக்கிற அளவு சென்றுவிட்டதில் வியப்பில்லை.
2. முதலாளித்துவ சோசலிஸம்.
முதலாளித்துவ வர்க்கத்தில் மனிதாபிமானிகளும் பரோபகாரிகளும் இன்னும் இவர்களைப் போன்றவர்களும் ஒரு வகை சோசலிஸம் பேசுகின்றனர். அதாவது வர்க்க சிந்தனையுள்ள பாட்டாளி வர்க்கமே இல்லாமல் முதலாளி வர்க்கம் வேண்டுமென்பதும், பாட்டாளிகள் பரலோக சிந்தனை மட்டுமே கொண்டு இகலோகத்தில் முதலாளி வர்க்கத்தி/ற்கு அடங்கி ஒடுங்கியிருக்க வேண்டும் என்பதும் இவர்கள் சித்தாந்தம். இன்னொரு வகையில் பொருளுற்பத்தி சாதனங்கள் முதலாளி வர்க்கத்தின் கையிலேயே இருக்க அரசாங்க செலவுகளை சுருக்கி சீர்திருத்தங்கள் செய்து பாட்டாளி வர்க்கத்தை சமாதானப்படுத்த வேண்டுமென்பது, பாட்டாளி வர்க்கத்தின் நன்மைக்காக என்று சொல்லிக் கொண்டு முதலாளித்துவ வர்க்கத்தை கட்டிக் காப்பதுதான் இவர்கள் நோக்கம். நடைமுறையில் இவர்கள் முதலாளித்துவ திட்டங்கள் ஒவ்வொன்றையும் ஆதரிப்பது கண் கூடு.
3. விமர்சன கற்பனா சோசலிஸமும் பொதுவுடைமையும்.
தொழிலாளி வர்க்கம் குழந்தைப் பருவத்தில் இருந்த காலத்தில் சரித்திர வளர்ச்சியில் இது எவ்வாறு தோன்றியது; எவ்வாறு வளர்ச்சியடையும் என்பவற்றைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் வர்க்கப் போராட்டம் முதலிய சரித்திர பூர்வமான அம்சங்களை பாராமல் சில கற்பனாவாதிகளின் திட்டப்படி சமுதாயம் வளர்ச்சி அடைந்து வருமென்று கருதியவர்களே கற்பனா சோசலிஸ்டுகள். நடைமுறையில் இவர்கள் வர்க்கப் போராட்டத்தை எதிர்ப்பவர்கள் ஆகவும், பண மூட்டைகளின் ஆதரவால் பூலோகத்தை சொர்க்கமாக்கிவிட முடியும் என்று நம்புகிறவர்களாகவும் இருக்கிறார்கள்.
4. இன்றுள்ள பல எதிர்கட்சிகளிடம் கம்யூனிஸ்டுகள் நடந்து கொள்ளும் முறை.
கம்யூனிஸ்டுகள் ஒவ்வொரு நாட்டிலும் இன்றைக்கு இருக்கும் சமூக பொருளாதார ஏற்பாடுகளுக்கு எதிராக நடக்கும் புரட்சிகரமான இயக்கங்கள் எல்லாவற்றையும் ஆதரிப்பவர்கள்.
இந்த இயக்கங்கள் ஒவ்வொன்றிலும் சொத்துடைமை பிரச்சனையை அந்த சமயத்தில் அதன் வளர்ச்சி எந்த நிலையில் இருந்தபோதிலும் முதலாவது பிரச்சனையாக முன்னுக்கு கொண்டு வருவார்கள்.
கடைசியாக அவர்கள் எல்லா நாடுகளிலும் உள்ள ஜனநாயகக் கட்சிகளுக்கிடையே ஒரு வகை ஒற்றுமை உண்டாக்கப் பாடு படுகிறார்கள்.
கம்யூனிஸ்டுகள் தங்கள் நோக்கங்களையும், இலட்சியங்களையும் மறைத்து வைக்க விரும்பவில்லை. அவர்கள் இன்றைய சமுதாய நிலைமைகளை பலாத்தகாரமாக தூக்கியெறியாமல் தங்கள் இலட்சியங்களை சாதிக்க முடியாதென்று பகிரங்கமாக கூறுகிறார்கள். பொதுவுடைமைப் புரட்சியைப் பற்றி நினைத்து ஆளும் வர்க்கங்கள் அலறிக் கொண்டிருக்கட்டும். உழைப்பாளிகள் இழப்பதற்கு தங்களை பிணைத்திருக்கும் தளைகளை தவிர வேறு ஒன்றுமில்லை. அடைவதற்கோ ஓர் உலகமே இருக்கிறது.
"உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்"
Comments
Post a Comment