அருமைத் தோழர் சிஎஸ்பி

தோழர் சி.எஸ்.பஞ்சாபகேசன் நூற்றாண்டு.

பதிவு 17

    -  எஸ்.மோகன்தாஸ்

       அகில இந்திய துணைத் தலைவர்,         

       All India BSNL-DOT Pensioners Association.

       (AIBDPA)

அருமைத் தோழர் சிஎஸ்பி வேலூரில் அஞ்சல் துறையில் பணி புரிந்தாலும், தொலைத் தொடர்பு நான்காம் பிரிவு ஊழியர் அமைப்பிலும் பங்கு வகித்தார். அவர்களுடைய அகில இந்திய மாநாடு பம்பாயில் நடைபெற்றபோது மாநாட்டுப் பிரதிநிதியாக தமிழகத்திலிருந்து கலந்து கொண்டார். அங்கு அவருடைய கருத்துக்கு கருத்தால் பதில் கூறமுடியாத நபர்கள்  வன்முறையில் ஈடுபட்டபோது  தோழர் சிஎஸ்பி குறிவைத்து தாக்கப் பட்டார். அதில் சிஎஸ்பி யின் மண்டை உடைந்து காயம் ஏற்பட்டது. 

அகில இந்திய அளவில் அஞ்சல் தொழிற்சங்க பகுதியிலும்  அதேசமயம் தொலைத்தொடர்பு தொழிற்சங்க பகுதியிலும் அமைப்பு ரீதியாக பங்கு பெற்றிருந்த அருமைத் தோழர் K. G. போஸுக்கு அடுத்தாற்போல, இந்த இரண்டு தொழிற்சங்க அமைப்புகளிலும் பங்கு பெற்றிருந்த ஒரே தலைவர் எனக்குத் தெரிந்து அருமைத் தோழர் சிஎஸ்பி தான். 

வறுமையோடு மிகப் பெரிய குடும்பத்தைச் சுமந்து கொண்டு தொழிற்சங்க தலைவராக மிளிர்ந்த தோழர் சிஎஸ்பி, என் போன்ற இளம் தோழர்களுக்கு முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டியவர். 1960 மத்திய அரசு ஊழியர் வேலைநிறுத்தப் போராட்ட சமயத்தில் கடுமையான அடக்குமுறை ஏவிவிடப்பட்டது. அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஊழியர்களுக்கு யாரும் எந்த உதவியும் செய்யக் கூடாது  என்று அறிவித்து காங்கிரஸ் குண்டர்கள் கலவரம் செய்து கொண்டிருந்தார்கள். அந்த போராட்ட சமயத்தில் ஒரு முறை தோழர் சிஎஸ்பி தன்னுடைய வீட்டின் கதவைத் திறந்து பார்த்த போது, ஒரு ஆச்சரியமான காட்சியைக் கண்டார். அவரது வீட்டு வாசற்படியில் தோழர்கள் சிலர் சமையலுக்குத் தேவையான அரிசி, பருப்பு, காய்கறிகள், எண்ணெய் போன்ற பொருட்களை வைத்து விட்டு சத்தமின்றி திரும்பிச் சென்றிருந்தனர். அந்தத் தோழமையை நினைத்து சிஎஸ்பி யின் கண்கள் கலங்கி விட்டன. இந்த சம்பவத்தை தோழர் சிஎஸ்பி ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் என்னிடம் பகிர்ந்து கொண்டபோதும் உணர்ச்சி மேலீட்டால் அவரது கண்கள் பனித்தன. 

சிஎஸ்பி யின் நாவன்மை மிகவும் அற்புதமானது. விசயங்களை கேட்பவர் மனங்களில் பசுமரத்தாணி போல பதிய வைப்பதில் அவருக்கு நிகர் அவர் மட்டுமே. அவரது வகுப்புகள் குறிப்பாக இயக்க இயல் பொருள் முதல் வாத வகுப்பு அற்புதமானதாக இருக்கும். நானும் வகுப்புகள் எடுக்கிறேன். அந்த வகுப்புகளில் எங்காவது ஓரிடத்திலாவது கண்டிப்பாக தோழர் சிஎஸ்பி யின் சாயல் இருக்கும். 

தமிழக தொலைத்தொடர்பில்  K.G.போஸ் அணியைக் கட்டி வளர்ப்பதற்கான கடினமான பணியில் நாங்கள் ஈடுபட்டிருந்த நேரத்தில் தோழர் சிஎஸ்பி யின் தொடர் வகுப்பு முகாம்களை ஏற்படுத்தி பயன்படுத்தியிருக்கிறோம். 

என் போன்ற இளம் தோழர்கள் வளர்ச்சி அடைய வேண்டும் என்பதில் அக்கறை கொண்டவர் தோழர் சிஎஸ்பி. என்னை கொஞ்சம் கொஞ்சமாக செதுக்குவதில் அக்கறை காட்டியவர். அவரை நாங்கள் எங்கள் இயக்கத்தின் பீஷ்ம பிதாமகர் என்று சொல்லிக் கொள்வதுண்டு.

நான் கேடர் சீரமைப்பு பயிற்சிக்காக சென்னை பயிற்சி கேந்திரத்தில் மூன்று மாத காலம் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பயிற்சி கேந்திரத்தில் அறை வாடகைக்காக தினமும் நான்கு ரூபாய் அலவன்ஸ் கொடுத்தார்கள். (1995ஆம் ஆண்டு). நான் சிஎஸ்பி யுடன் நெருக்கமான தொடர்பில் இருக்க வேண்டுமென்று விரும்பினேன். கிழக்கு தாம்பரத்தில் அவரது வீட்டின் முன்புறம் காலியாக இருந்த மாடியறையில் நான் தங்கிக் கொள்வதற்கு அனுமதியளித்தார். அங்கு தங்கியிருந்து பயிற்சி நேரம் போக மற்ற நேரங்களில் அவரது பணிகளில் அவருக்கு உதவியாளனாக இருந்தேன். என்றும் மறக்க முடியாத நாட்கள் அவை.

Comments

Popular posts from this blog

My periappa and periamma

GDS ஊழியரை Group E ஊழியராக்குக

மார்க்சியம் வெற்றி பெற மூன்று தளங்களில் போராட்டம்