தோழர் CSP - எதையும் விசாரணையின்றி அச்சேற்றமாட்டார். தோழர் C.S.பஞ்சாபகே
தோழர் சி.எஸ்.பஞ்சாபகேசன் நூற்றாண்டு
பதிவு 21
- K.ராகவேந்திரன்
முன்னாள்மாபொதுச்செயலர் NFPE
தோழர் CSP - எதையும் விசாரணையின்றி அச்சேற்றமாட்டார்.
தோழர் C.S.பஞ்சாபகேசன் உழைக்கும் வர்க்கம் மாத ஏட்டின் நிறுவன ஆசிரியர். தீர விசாரிக்காமல் எதையும் பிரசுரிக்கக் கூடாது என்பது அவரின் ஆழமான கொள்கை. உழைக்கும் வர்க்கம் இதழில் எழுதப்படும் எதையும் யாரும் உண்மையல்ல என்று மறுத்துச் சொல்லிவிடக்கூடாது என்பதை ஒரு நடைமுறையாகக் கொண்டு செயல்பட்டவர் தோழர் CSP. அதனால் தான் உழைக்கும் வர்க்கத்தின் கருத்துக்கள் யாவும் எல்லோராலும் ஏற்கப்பட்டன. இந்த அனுபவம் உழைக்கும் வர்க்கம் இதழோடு நெருங்கிய தொடர்புகள் கொண்ட எனக்குப் புதியவை அல்ல என்றாலும் ஒரு நிகழ்வினை இங்கே சுட்டுக்காட்ட விழைகிறேன்.
மத்திய அரசு ஊழியர்களுக்கான ஐந்தாம் ஊதியக்குழு அமைக்கப்பட்ட காலம். NFPE மாபொதுச்செயலர் தோழர் ஆதி முயற்சியில் 1993-ம் ஆண்டு அஞ்சல் JCA அமைக்கப்பட்டு மகத்தான 4 நாள் காலவரம்பற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்பட்டது. அந்த வேலைநிறுத்தத்தின் விளைவாக அதுவரை நடைமுறையில் இருந்த ஓய்வு பெற்ற அதிகாரிக்கு பதில் நீதியரசர் சரஞ்சித் சிங் தள்வார் தலைமையில் GDS விசாரணைக்குழுவை 4-வது ஊதியக்குழு காலத்திலேயே முதன் முறையாக அமைக்கப்பட்டது.
அஞ்சல் மூன்று, அஞ்சல் நான்கு சார்பாக NFPE சம்மேளனத்தால் GDS கோரிக்கைகள் குறித்து விரிவான மகஜர் அளிக்கப்பட்டது. அந்த மகஜரையொட்டி தமிழ்நாட்டில் பிரச்சாரங்களும் முடுக்கி விடப்பட்டன.
அப்போது தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கம் சம்மேளனத்திற்கு எதிராக மாற்று மகஜர் ஒன்றைத் தயார் செய்தது. அறிவுஜீவி என்றழைக்கப்படும் தோழர் KVS அந்த மகஜரின் அடிப்படைப் பகுதிகளைத் தயாரித்தார். சம்மேளனம் வழங்கிய மகஜர் அடிப்படையை நிராகரித்த அந்த மகஜர் "GDS ஊழியர் அனைவரையும் இலாகா ஊழியராக்க அரசுக்கு பெரிய செலவே ஆகாது" என்ற அடிப்படையில் தனது வாதங்களை எழுப்பியதுடன், தள்வார் கமிட்டிக்கு அந்த மகஜரை NFPE சம்மேளனத்தின் ஒப்புதல் ஒன்றியே அனுப்பவும் செய்தது. அதையொட்டி மாநிலத்தின் பல பகுதிகளிலும் சிறப்பு GDS கூட்டங்களைக்கூட்டி தங்கள் மகஜர் சம்மேளன மகஜரை விட மேலானது என்று பிரச்சாரமும் செய்தார்கள்.
ஆனால், அஞ்சல் மூன்று மாநிலச் சங்கத்தின் வாதமும் சரி, சொல்லப்பட்ட கணக்கீடுகளும் சரி, அடிப்படையில் தவறாகக் கட்டமைக்கப்பட்டிருந்தன. சம்மேளன் மகஜரின் வாதங்களே சரியானவை; தமிழ் மாநில அஞ்சல் மூன்றின் மகஜர் அடிப்படையில் தவறானது என்பதை ஆழமான விவாதங்கள் - கணக்கீடுகள் மூலம் விளக்கி ஒரு புத்தகமாக வெளியிட சென்னை வடகோட்ட அஞ்சல் மூன்று சங்கத்தின் சார்பில் முடிவு செய்து தோழர் CSP-யிடம் அந்த நகலைக் காட்டினோம். அப்போது சென்னை வட கோட்டத் தலைவராக நானும் கோட்டச் செயலராக தோழர் ஸ்ரீவெங்கடேஷ் அவர்களும் பொறுப்பில் இருந்ததால், எங்கள் பெயரில் "ED அடிமை முறையை ஒழிப்போம்! இலாகா ஊழியராக்கிடுவோம்!! என்ற ஒரு பிரசுரத்தை வெளியிடுவதென முடிவு.
ஆழமாகப் பிரசுரத்தின் நகலை ஊன்றிப் படித்தார் தோழர் CSP. ஒரு திறமையான வழக்கறிஞரை மிஞ்சும் கேள்விகள் சரமாரியாக அவரிடம் இருந்து வந்தன. முன்வைத்த கணக்கீடுகள் சரியென்று நிரூபிக்க திக்குமுக்காடிப் போனோம். கடைசியில் அவர் ஏற்புடன் புத்தகமாக வெளியிட்டோம். சம்மேளன மகஜரை விடத் தங்கள் மகஜரின் வாதங்களும் கணக்கீடுகளும் தான் சரியானவை என்ற வாதங்கள் சுக்கு நூறாக உடைத்தெறியப்பட்டன.
தோழர் CSP சரியான கருத்தை மட்டுமே ஊழியர் முன் வைக்க எவ்வளவு முயற்சிகள் மேற்கொண்டார் என்பதும்; உழைக்கும் வர்க்கம் இதழ் மட்டுமல்ல, K.G.போஸ் அணி சார்பில் வெளியிடப்படும் அறிக்கைகள் கூட மிகச் சரியாக இருக்க வேண்டும் என்பதில் தோழர் CSP எவ்வளவு கறாராக செயல்பட்டார் என்பதை மேற்கண்ட நிகழ்வு நமக்கு சரியான புரிதலை அளிக்கிறது. தோழர் CSP எக்கருத்தையும் முறையான விசாரணைக்கு உட்படுத்தாமல் அச்சேற்ற மாட்டார் என்பது அவரின் சிறப்பு.
Comments
Post a Comment