தோழர் CSP - குடும்ப ஜனநாயகத்தை உயர்த்திப் பிடித்தவர்!
தோழர் சி.எஸ்.பஞ்சாபகேசன் நூற்றாண்டு:
பதிவு 16.
தோழர் CSP - குடும்ப ஜனநாயகத்தை உயர்த்திப் பிடித்தவர்!
- K.ராகவேந்திரன்
முன்னாள் மாபொதுச்செயலர் NFPE
1982-ம் வருடம். நான் அஞ்சல் மூன்று தமிழ் மாநில சங்கத்தில் உதவி மாநிலச் செயலராகப் பொறுப்பில் இருந்தேன். சென்னை ஓட்டல் அறை ஒன்றில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்திருந்தோம். தோழர் CSP, BVS உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கு பெற்ற கூட்டம். இரு நாட்களுக்கு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதல் நாள் கூட்டம் இரவு எட்டு மணி அளவில் முடிவடைந்து தோழர் CSP உள்ளிட்ட அனைவரும் அவரவர் வீட்டிற்குச் சென்றோம். அடுத்த நாள் கூட்டத்தில் கலந்து கொள்ள அனைவரும் ஆர்வமுடன் வந்து விட்டோம்.
தோழர் சிஎஸ்பி வழக்கத்தை விட உற்சாகமாக காணப்பட்டார். கூட்டம் துவங்கு முன்பே நாங்கள் எல்லாம் அவரை சூழ்ந்து கொண்டு ஏதோ சொல்லப்போகிறார் என்று ஆவலோடு காத்திருந்தோம்.
தன் ஜோல்னா பையில் இருந்து பெரிய ஸ்வீட் பாக்கெட் எடுத்தார். எங்களைப் பார்த்து 'நேற்று ஒரு விசேஷமான நாள். என்னவென்று யாராவது கூற இயலுமா?' என்று வினா எழுப்பினார்.
உங்கள் பிறந்த நாள் என்று சிலர் உரக்க பதில் அளித்தோம். தலையை இருபுறமும் ஆட்டி தோழர் CSP மறுத்தார். உங்கள் திருமண நாள் என்று சிலர் இழுத்தனர். அதற்கும் மறுப்பாகத் தலையசைத்தார். யாராலும் சரியாக ஊகிக்க இயலவில்லை!
பின் தோழர் CSP-யே பதில் கூறினார்! "நேற்று மாலை நாம் கூட்டம் நடத்திக்கொண்டிருந்த சமயம் என் மகன் ரவிசங்கரின் திருமணம் நடந்து முடிந்து விட்டது! அதற்குத் தான் இந்த இனிப்பு" என்று கூறியதும் எங்களுக்கெல்லாம் பெரிய ஆச்சரியம்!
அவர் தொடர்ந்து கூறினார் " நேற்று மாலை திடீரென என் மகன் ரவிசங்கர் அவர் காதலிக்கும் பெண்ணுடன் வீட்டிற்கு வந்து, இன்றே நம் வீட்டிலேயே நாங்கள் திருமணம் செய்து கொள்ள போகிறோம் என்று கூறியிருக்கிறார்கள். என் மனைவி அவர்கள் கேட்டுக் கொண்டபடி அவர்கள் திருமணத்தை நடத்தி முடித்து விட்டார். நம் கூட்டம் நடைபெறும் இடம் தெரியாததால்
எனக்கு தகவல் தர இயலாமல் போனது. கூட்டம் முடிந்து இரவு நான் வீடு திரும்பிய பின் தான் நடந்த சம்பவம் முழுவதும் எனக்குத் தெரியும்" - என்றாரே பார்க்கலாம்!
எங்கள் ஆச்சரியம் பல மடங்கு பெருகியது. தன் மகன் திருமணம் தான் இல்லாமல் நடந்ததா? அவர் மனைவியே முடிவெடுத்து திருமணத்தை நடத்தி விட்டாரா? தோழர் CSP இல்லாமல் அவர் மகன் திருமணம் அவர் ஒரு கூட்டத்தில் இருக்கும் போது நடந்து முடிந்ததா? அதனையும் மனமுவந்து ஏற்று ஸ்வீட் தருகிறாரா? இப்படியும் நடக்குமா என்றெல்லாம் கேள்விக் கணைகள்!
ஆனால் தோழர் CSP குடும்பத்தில் எவ்வளவு ஜனநாயகவாதியாக இருந்திருந்தால் தோழர் CSP- யின் துணைவியார் இது போன்ற துணிச்சலான முடிவை தோழர் CSP இல்லாத சமயத்தில் எடுத்திருக்க முடியும்? தோழர் CSP குடும்பமே இதை எப்படி அமல்படுத்தியிருக்க முடியும்? காதலை எதிர்க்கும் பலர் மத்தியில் 1982-ம் ஆண்டிலேயே இது போன்ற அசாதாரண நிகழ்வை தோழர் CSP-யும் அவர் குடும்பமும் செய்து முடித்தது என்றால் வெறும் வார்த்தைகளால் ஊருக்கு உபதேசம் செய்த உபந்நியாசகர் அல்ல; வாழ்வில் கடைபிடித்த புரட்சியாளர் தோழர் CSP என்பதை உலகரிய எடுத்துரைத்த நிகழ்வே தோழர் ரவிசங்கரின் திருமணம்! ஊருக்கு உபதேசம் செய்பவர்கள் ஏராளமானோர் உண்டு; உண்மை வாழ்வில் கடைப்பிடிப்போர் ஒரு சிலரே! அந்த ஒரு சிலரில் தோழர் CSP முதன்மையானவர்.
Comments
Post a Comment