தோழர் CSP - வலது, இடது திரிபுகளுக்கு எதிரான போராளி!

 தோழர் சி எஸ் பஞ்சாபகேசன் நூற்றாண்டு

பதிவு 29

தோழர் CSP - வலது, இடது திரிபுகளுக்கு எதிரான போராளி!

தோழர் ராகவேந்திரன்

தோழர்களே! தோழர் CSP ஒரு பொதுவுடைமை வாதியாக தன் கொள்கைகளை தொழிற்சங்கத்தில் உயர்த்திப் பிடித்து வாழ்ந்தவர் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயமே! ஆனால் அவர் வலது மற்றும் இடது திரிபுகளுக்கு எதிராக சமரசமற்ற போர் புரிந்தவர் என்பது பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை. 

தபால் தந்தி தொழிற்சங்கமாம் NFPTE பேரியக்கத்தில் வலது திரிபின் சார்பான தலைமையின் செயல்பாடுகளுக்கு எதிரான சமரசமற்ற போராளியாக தோழர் CSP ஆற்றிய மகத்தான பணி இயக்கத்தில் K G.போஸ் அணி வேரூன்ற அடித்தளமிட்டது என்றால் மிகையல்ல. அஞ்சல் பகுதி தவிர, ஏராளமான தோழர்களை டெலிகாம் பகுதியில் வென்றெடுத்த நிகழ்வு அவரது வலது திரிபிற்கு எதிரான போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றியே.

ஆனால் இடது தீவிரவாதமும் ஒரு சவாலாக எழுந்த காலம் அது. இயற்கையாகவே பல இடது திரிபின் பல அம்சங்களை உட்படுத்திய தோழர்களுடன் தொடர்பு எனக்கு ஏற்பட்டது. அடிக்கடி நிறைய சந்தேகங்கள் எழும்! தோழர் CSP பணி ஓய்விற்குப் பின் சென்னை தாம்பரம் சானடோரியத்தில் தன் மகன்களுடன் வசித்து வந்தது எனக்கு வசதியாகப் போயிற்று. அவரை வீட்டில் சந்தித்து என் சந்தேகங்களைப் போக்கிக்கொள்வேன். நிறைய நாட்கள் சென்று அவரிடம் பேசி என் சந்தேகங்களுக்குத் தெளிவு பெற்றேன். அவர் சொன்னபடி நிறையப் புத்தகங்கள் படித்தேன். அவரது ஆலோசனைகள் பெரிதும் பயனளித்தன். பின்னர் இடது தீவிரவாதிகளை எதிர்கொள்வேன். அவர்கள் முன்வைத்த வாதங்களை உடைத்தெறிவேன்.

ஒரு நிகழ்ச்சி என் நினைவுக்கு வருகிறது. ஊட்டியில் இருந்து தோழர்கள் ராதாகிருஷ்ணனும் கோத்தகிரி தோழர் முரளியும் - இருவரும் தந்தி பயில சென்னை வந்தனர். மாம்பலத்தில் தங்கினர். SUCI மாநில நிர்வாகிகளுடன் அவர்களுக்குத் தொடர்பு ஏற்பட்டது. இருவருக்கும் நிறைய குழப்பங்கள். என்னை சந்தித்த போது அவர்களின் பேச்சு மூலம் நான் அவர்கள் SUCI நண்பர்களைச் சந்தித்து ஏதும்.உரையாடினீர்களோ என்று கேட்டேன். இருவருக்கும் ஆச்சரியம். ஆம் என்று ஒத்துக்கொண்டனர். வாருங்கள் அவர்களை சந்திப்போம் என்று நான் கிளம்பினேன்.

அவர்கள் ரொம்பப் பெரிய தலைவர்கள் என்று இழுத்தனர் இருவரும். வாருங்கள்; நேராக அவர்களை சந்திப்போம்.உங்கள் சந்தேகங்களைத் தீர்த்தாலும் மீண்டும் மீண்டும் புதிய சந்தேகங்களுடன் வரத்தான் செய்வீர்கள்; அதைவிட நேரடியாக அத்தலைவர்களையே பார்த்து விடுவோம் என்றேன். தோழர் CSP மூலம் கற்ற வித்தை தான் இது.

நேரில் சந்திக்க SUCI தலைமை அலுவலகம் செயல்பட்டு வந்த மாம்பலம் ராமனாதன் தெரு என்று நினைக்கிறேன்; அங்கே ஒரு அபார்ட்மெண்டுக்கு அழைத்துச் சென்றனர். அங்கே தலைவரும் சில நண்பர்களும் இருந்தனர். அறிமுகத்திற்குப் பிறகு வாதங்கள் துவங்கின.

அவர் முன்வைத்த வாதங்களை தோழர் மாவோவின் சொந்த நூல்களின் மேற்கோள்கள் மூலம் உடைத்தெறிந்தேன். இரு நண்பர்களுக்கும் வெளியில் வந்தபின் மிக்க மகிழ்ச்சி. எங்கள் சந்தேகங்கள் தீர்ந்தன என்று மகிழ்வோடு கூறியது இன்றைக்கும் என் நினைவில் உள்ளது. சிங்கத்தை அதன் குகையிலேயே சென்று சந்திக்க வேண்டும் என்ற ஆசான் தோழர் CSP கூறிய அறிவுரை தான் என் தைரியம் மற்றும் தந்திரத்திற்கு அடிப்படை. இரண்டு முக்கியத் தோழர்களை அன்று காப்பாற்றி நேர் வழியில் தொடர வைத்தேன். ஆனால் அதன் அஸ்திவாரம் தோழர் CSP என்றால் மிகச்சரி! 

தன் வாழ்நாள் முழுதும் திரிபுகளுக்கு எதிராகப் போர் புரிந்த போராளி அவர். வலது திருத்தல்வாதம், இடது தீவிரவாதம் இரண்டிற்கும் எதிரான அவர் தொடர்ந்த வாதங்கள் நூற்றுக்கணக்கான தோழர்களை நல்வழிப்படுத்தின! இயக்கத்தில் செயல்பட வைத்தன. தோழர் CSP திரிபுகளுக்கு எதிரான சமரசமற்ற போராளி!

Comments

Popular posts from this blog

My periappa and periamma

GDS ஊழியரை Group E ஊழியராக்குக

மார்க்சியம் வெற்றி பெற மூன்று தளங்களில் போராட்டம்